Published : 07 Mar 2022 04:32 PM
Last Updated : 07 Mar 2022 04:32 PM

"சுயசார்பு... நிறைவேறும் வஉசி கனவு" - தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7,3,2022)  தூத்துக்குடியில் 1156 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”சுயசார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்ட வ.உ.சிதம்பரனாரின் கனவு நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது” என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் 1156 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் ஆற்றிய உரையில், "தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பத்து மாதங்கள் முடிந்து இருக்கிறது. 11-ஆவது மாதம் தொடங்கக்கூடிய இந்த நாளில், தூத்துக்குடியில் இத்தகைய விழாவை ஏற்பாடு செய்து அந்த விழாவில் நானும் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை நாங்கள் கூட்டினோம். விரைவில் நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறோம். அது குறித்து ஆலோசனைகளை அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் கலந்து பேசினோம். இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு, தமிழகத்தில் இருக்கக்கூடிய வணிகப் பெருமக்கள், உழவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் நிதிநிலை எப்படி அமையவேண்டும், எந்த நிலையிலே இருந்திடவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக அவர்களோடு கலந்து பேசி, அதற்குப் பிறகு அதை நிறைவேற்றுகின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம். இப்படி மக்கள் நல அரசாக, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசாக, என்னுடைய அரசு என்று நான் சொல்லமாட்டேன், நம்முடைய அரசு, நமது அரசு என்றுதான் நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டுத்தான், நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன்.

சர்வதேச அறைகலன் பூங்கா இங்கு அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொடங்கப்படக்கூடிய இத்தகைய பூங்கா, இங்குதான் அமையப் போகிறது என்ற பெருமை இந்தத் தூத்துக்குடிக்கு கிடைத்துள்ளது. இந்தியாவினுடைய தென் எல்லையில் இருக்கிற மாவட்டம் இந்த மாவட்டம். அந்த மாவட்டத்தில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைய இருக்கிறது. முத்துக்குளிக்கும் முத்து நகரில், மிகப்பெரிய நிறுவனம் அமையப் போகிறது. நம்முடைய இந்திய விடுதலை வேள்விக்குத் தங்களது உடலையே விறகாகத் தந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் பிறந்த மண்ணில் இது அமையப் போகிறது.

சொந்த தேசத்தில், சொந்தப் பணத்தில், சுயச்சார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டவர்தான் வ.உ.சிதம்பரனார். அவரது பொருளாதாரக் கனவு நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது. நீர் வளம், நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழரின் ஆட்சி, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் நிலமாகவும் இந்தத் தூத்துக்குடி விளங்கிக் கொண்டிருக்கிறது. முத்துக் குளிக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றதால்தான் தூத்துக்குடியை ''முத்து நகர்" என்று நாம் சொல்கிறோம். இந்த முத்து நகரைத்தான், 2008-ஆம் ஆண்டில், நம்முடைய தலைவர் கருணாநிதி தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கிராமங்கள் நகரங்கள் ஆக வேண்டும். நகரங்கள் மாநகரங்கள் ஆகவேண்டும் என்பதுதான் கழக அரசினுடைய கொள்கை. அந்த அடிப்படையில் தூத்துக்குடியை மாநகராட்சியாக கருணாநிதி அறிவித்தார். ஏராளமான திட்டங்களை, நிறுவனங்களை இந்த மாவட்டத்திற்குச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை மாநகராட்சியாக உருவாக்கிக் கொடுத்தார். அந்த வரிசையில் இன்றைய நாள், இந்த சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்க இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தினை இதற்குத் தேர்ந்தெடுத்தற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. தென் தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்தான் தூத்துக்குடியில் இந்த சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் 2-ஆவது பெரிய துறைமுகமாக இருப்பதோடு, அகில இந்திய அளவில் 3-ஆவது பெரிய கொள்ளளவு கொண்ட தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக இந்தத் தூத்துக்குடி துறைமுகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் தூத்துக்குடியில் இந்தப் பூங்காவை அமைக்க முடிவெடுத்தோம்.

கரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து இன்னும் சில மாநிலங்கள் மீளவில்லை. கரோனா காரணமாக விழுந்த பொருளாதாரத்தை சில மாநிலங்கள் இன்னமும் மீட்டெடுக்க முடியவில்லை. கரோனாவில் இருந்து மீண்டது மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் மேம்பாடு அடைய வைக்க தமிழ்நாடு அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதனால்தான் நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்து மாத காலத்தில் சீராக இருந்து வருகிறது. அது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. வறுமையை ஒழித்தல், வேலைவாய்ப்பினை பெருமளவில் உருவாக்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் சமூகநீதி காத்தல் போன்ற நோக்கங்களோடு அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற 'திராவிட மாடல்' இலக்கினை நோக்கி நாம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.

தற்போது நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களும், எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளும், குறுகியகால நல்விளைவுகளுக்காக மட்டும் மேற்கொள்ளப்படுபவை கிடையாது. நமது மாநிலத்தின் மகத்தான வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, அதன்மூலம் தொழில் வளர்ச்சியை சிறப்புற உயர்த்தி, நமது தமிழ் மக்கள் அனைவருக்கும் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஒரு சிறப்பான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள், இலட்சியம். இதுவரை மூன்று முதலீட்டாளர்கள் மாநாட்டை நாம் நடத்தியிருக்கிறோம். இம்மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நமது மாநிலத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கக்கூடிய பெரும் நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுகின்றது. இரண்டு மாநாடுகள் சென்னையிலும், மூன்றாவது மாநாடு கோவையிலும் நடத்தப்பட்டது. இம்மாநாடுகள் முதலீட்டாளர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

"நிதி நுட்பக் கொள்கை", ''ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை'' போன்ற துறை சார்ந்த கொள்கைகளைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதுவரை 109 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இவற்றில், உறுதி செய்யப்பட்ட 56 ஆயிரத்து 229 கோடி ரூபாய் முதலீட்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டங்கள், பரவலாக மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி, சமச்சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி" என்று நான் சொன்னேன். அவையே செயல் வடிவம் ஆகி வருகிறது.

முதலீடுகளை ஈர்த்திட, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, இத்தகைய திட்டங்களுக்கான தொடக்க விழாக்களை நடத்தி, மாநிலம் முழுவதும் பரவலான மற்றும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய இலக்கு, இந்த அரசினுடைய இலட்சியம். தென் மாவட்டங்களைத் தொழில்மயமாக்கிட, இந்த அரசு மிகப் பெரும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தின் தென் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி மற்றும் சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில், புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில், தொழில் முனைவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில், தென்மாவட்டத் தொழிற்பூங்காக்களில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன:

ஊக்கத்தொகை அளிக்க நிர்ணயம் செய்திடும் முதலீட்டு வரம்பு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்கள் மற்றும் வளர்ச்சி மையங்களில், 50 விழுக்காடு மானியத்தோடு நிலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முத்திரைக் கட்டணத்திலிருந்து 100 விழுக்காடு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், ஆம்வே (Amway), போஷ் (Bosch), ஏடிசி டயர்ஸ் (ATC Tyres), பிரிட்டானியா (Brittannia), ஐடிசி லிமிடெட் (ITC Limited), சின்டெல் (Syntel) போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே தென் மாவட்டங்களில் தங்கள் தொழிலகங்களை நிறுவி, தங்கள் வணிக உற்பத்தியினையும் தொடங்கி உள்ளன. இத்தோடு சேர்த்து, தென் மாவட்டங்களுக்கென்று மேலும் பல சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்திலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாளொன்றிற்கு 30 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேனி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்காக்கள் நிறுவிட சிப்காட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக்கூடிய பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம், இ.முத்துலிங்கபுரம் மற்றும் துலுக்கப்பட்டி கிராமங்களில், ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் மித்ரா (மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைப் பூங்காக்கள்) திட்டத்தின் கீழ் ஒரு மெகா ஜவுளிப் பூங்காவை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக்கூடிய பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து, அத்துறைகளுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எதிர்கால மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மற்றும் நவீன உள்கட்டமைப்பு முதலீடுகளுடன் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இன்று தொடங்கி வைக்கக்கூடிய திட்டமாகும். 2021-22ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், தமிழ்நாட்டில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும் என்று நாம் அறிவித்திருந்தோம். அதை நடைமுறைபடுத்தும் விதமாக இந்த சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டி வைப்பதில் நான் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாங்கள் சொல்வதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்! இன்றைய காலச் சூழலுக்கு இது மிகமிக அவசியமான திட்டம் ஆகும். உலக அளவில் அறைகலன் / மரச்சாமான்கள் சந்தையானது 2020-25 ஆம் ஆண்டிற்குள் 750-800 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் என்று வல்லுநர்களால் கணிக்கிடப்படுகிறது. இந்தத் தொழிலில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்தக் குறையினை போக்கும் விதத்தில், தமிழ்நாடு அரசு இந்த பூங்காவை அமைத்துள்ளது.

உலகத்தரத்திற்கு இணையாக ஒரு சர்வதேச அறைகலன் பூங்காவை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. இதற்காக, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள 1156 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. அறைகலன்கள் தயாரிப்பில் 70 முதல் 80 விழுக்காடு மூலப்பொருள் தேவையை இந்தப் பூங்காவிலேயே பூர்த்தி செய்திடும் வகையில் முழுமையான சூழல் அமைப்பு இந்த சர்வதேச அறைகலன் பூங்காவில் உருவாக்கப்படவுள்ளது. சுருங்கச் சொன்னால், உலக அளவில், அறைகலன் உற்பத்தியில், தமிழ்நாட்டின் போட்டியிடும் திறன் வெகுவாக அதிகரிக்கும். அதற்கென 600-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை அணுகி, விநியோகச் சங்கிலியில் பெரும் பங்கு வகிக்கும் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நூற்றுக்கணக்கான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய நிறுவனம் 430 கோடி ரூபாய் முதலீட்டில், தங்களது கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உற்பத்தி ஆலையை இந்தப் பூங்காவில் நிறுவிட முன்வந்துள்ளது.

அதேபோல் பல வர்த்தக நிறுவனங்கள் 300 முதல் 750 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது திட்டங்களைத் துவக்கிடவும் ஆர்வத்தை தெரிவித்துள்ளது. இது உள்ளபடியே பெருமை அளிக்கக்கூடிய செய்தி. அவற்றுள் 'ஹெட்டிக்' மற்றும் 'டெசனின்க்' ஆகிய 2 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தொழில்நிறுவனங்களை ஈர்க்கும் அரசாகவும் நமது அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொன்னோம் 'தமிழகம் மீட்போம்' என்று நான் என்னுடைய பிரசாரத்தில் தொடர்ந்து சொன்னேன். இப்போது அந்தப் பணியில்தான் என்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

அனைத்துத் துறைகளிலும் 'தமிழகம் நம்பர் 1' என்ற நிலையை நிச்சயமாக விரைவில் அடையப் போகிறது என்று என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிற அதே நேரத்தில் இன்னொன்றையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். நிச்சயமாக இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறப் போகிறது விரைவில். அதற்கு ஒரு அடையாளம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எப்பொழுதுமே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு ஒரு minute to minute programme தயார் செய்வார்கள். Programme schedule ஒன்று தயார் செய்து என்னிடத்தில் ஒரு நகலை கொடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் இந்த நிகழ்ச்சியை 9.45க்கே தொடங்கிவிட்டோம். ஆக நிகழ்ச்சியை அறிவித்ததற்கு முன்னாடியே நடத்தத் தொடங்கிவிட்டோம்.

நான் பேசுகிற நேரத்தையும் கூட கவனித்துப் பார்த்தேன். 10.44க்கு ஆரம்பித்து 10.56க்கு முடிக்க வேண்டும் என்று. ஆனால் நான் பேசத் தொடங்கியது 10.30க்கே பேச ஆரம்பித்து விட்டேன். ஆக எல்லாவற்றிலும் முன்கூட்டியே போய்க்கொண்டிருக்கிறோம். ஆகவே இந்த fast, இந்த முன்கூட்டியே இருக்கக்கூடிய இந்த நிலை, நாம் ஈடுபட்டிருக்கக்கூடிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த நிலையில் இருந்து வெற்றி பெறவேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x