

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளியின் வங்கிக் கணக்கில் அதிகாரிகளுக்குப் பதிலாக ஆளுங்கட்சியினர் பணம் செலுத்துவதால் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் நேற்று அளிக்கப்பட்ட மனு விவரம்:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் திமுக கொடுத்த மனு அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஊதியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இருந்து ஆளுங் கட்சியினர் வாங்கி, பணம் செலுத்துவதாக புகார் வந்தது. வாக்குக்காக இப்படிச் செய்வதாக தெரிகிறது.
இதுபற்றி நாங்கள் விசாரித்தபோது, அவ்வாறு பணம் செலுத்துவது உண்மை யென தெரியவந்தது. எனவே, இதுகுறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் பணம் செலுத்துவதை அனுமதிக் கக்கூடாது என்று வங்கிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.