Published : 07 Mar 2022 01:49 PM
Last Updated : 07 Mar 2022 01:49 PM

'டாஸ்மாக் கடைகளில் மதுபான விலையை உயர்த்துவதால் மதுப்பழக்கம் குறையாது' - மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்

"பட்ஜெட் கூட்டத்தில் மதுபான விலையேற்றம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்; விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதைச் செய்ய தவறும்பட்சத்தில், வரும் ஏப்ரல் மாதம் சாத்தூரில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் முதல் மாநாடு நடைபெறும்" என்று அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்லப்பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் செயல்படும் 6,434 டாஸ்மாக் மதுக் கடைகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.36,752 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு மதுபாட்டில்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைவான விலையான ரூ.120-க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில் தற்போது ரூ.130-க்கு விற்கப்படுகிறது. மற்ற ரக மது பாட்டில்கள் குவாட்டருக்கு ரூ.20, ஆஃப் மதுபாட்டில்களுக்கு ரூ.40, ஃபுல் மதுபாட்டில்களுக்கு ரூ.80 வரை கூடுதலாக விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்து, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டாஸ்மாக் பொது மேலாளர்கள் விலை உயர்வு விவரப் பட்டியலை அனுப்பி அறிவுறுத்தியுள்ளனர். அதனால், மதுப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்லப்பாண்டியன் கூறியது: " கட்சிக் கொடி இல்லாத கிராமங்கள் கூட இருக்கலாம், ஆனால் இன்று 'கட்டிங்' போடாத கிராமத்தை உங்களால் பார்க்க முடியாது. நாங்கள் குவாட்டரில் கை வைத்தால்தான், நீங்கள் கோட்டையில் கொடியேற்ற முடியும்.

தமிழக அரசியலில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் காலத்தில், அரசியல் கட்சிகளின் கொள்கைக்காக கூட்டம் சேர்ந்து மக்கள் கொடி பிடித்தது அந்தக் காலம். ஆனால், இன்று குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுக்காமல் கூட்டம் சேர்த்து விட முடியாது. கோட்டையில் ஆட்சியாளர்களின் கொடிப் பறக்க வேண்டும் என்றால், குடிமகன்களுக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் அவசியம் கொடுக்க வேண்டும். இது அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெரியும்.

தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மதுப்பிரியர்கள் உள்ளனர். அரசுக்கு வருவாய் இனமாக இருக்கக்கூடிய மதுப்பிரியர்களை பாதிக்கும் வகையில், மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தியிருப்பது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. அரசுக்கு வரி மற்றும் விலையை உயர்த்துவதற்கு எத்தனையோ துறைகள் உள்ள நிலையில், எங்கள் மீது வரியை திணிப்பது சரியானது அல்ல. பேருந்துகளில் மகளிரை இலவசமாக அனுமதிப்பதினால், பகல் நேரத்தில் ஏற்படும் இழப்பை இரவில் மதுபானம் வாங்கும் எங்கள் மீது திணிப்பது நியாயமற்றது.

தன்னுடைய சொந்த காசில் குடிப்பவர்கள் மதுப்பிரியர்கள். எங்காவது, மதுப்பிரியர்கள் கடன் வைத்துள்ளனரா? எங்களால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதுண்டா? டாஸ்மாக் கடையிலும், பாரிலும் 5 பைசா கடன் இல்லாமல் குடித்து வரும் நிலையில், மதுபானங்கள் மீதான விலை உயர்வு கண்டனத்துக்குரியது. மதுபானங்களின் விலையை உயர்த்தினால், மதுப்பழக்கம் குறையும் என்ற அரசின் எண்ணம் தவறானது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன.

சுமார் 61.4 சதவீதம் மதுப்பிரியர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலை வரன்முறை இல்லை. தற்போது, குவாட்டருக்கு (Quarter) ரூ.20, ஆஃப்புக்கு (Half) ரூ.40 மற்றும் புஃல்லுக்கு (Full) ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது இல்லாமல், டாஸ்மாக் கடைகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. தெரியாத்தனமாக இந்த குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு காரணத்தால், மதுபானங்களின் விலையை உயர்த்தி, மதுப்பிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் அரசு நசுக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இந்த விலையேற்றம் குறித்து பட்ஜெட் கூட்டத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மதுப்பழக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் உள்ள இளைஞர்கள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணங்களை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் மதுப்பிரியர்களின் குடும்பத்திற்கு அரசு எதுவுமே செய்வதில்லை.

இனியும் மதுப்பிரியர்கள் ஏமாறமாட்டார்கள். நாங்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டோம். எனவே விலை உயர்வு குறித்து உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில், வரும் ஏப்ரல் மாதம் சாத்தூரில் முதல் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் அரசியல் கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவெடுக்கப்படும். பொறியாளர்கள், மருத்துவர்கள் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் மதுப்பிரியர்களில் உள்ளனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு கூட உரிமைகள் உள்ளன. ஆனால், காசு கொடுத்து மது குடிக்கும் எங்களுக்கு உரிமைகள் இல்லையா? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட 2003-ம் ஆண்டில், 47 வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இன்று 450 வகையான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் என்ன சேர்க்கப்படுகிறது, ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது என்று மதுப்பிரியர்களுக்கு தெரிவதில்லை. டாஸ்மாக்கில் தரமான பிராண்டை விற்பனை செய்யாதது ஏன்?

அரசுக்கு இன்று வருவாய் ஈட்டித் தருவதில் முதன்மையான இடத்தில் இருப்பது மது விற்பனை. அரசின் வருவாய் இனமாக மதுப்பிரியர்களுக்கு அரசு எதுவும் செய்வதில்லை. அத்தகைய மதுப்பிரியர்களின் வருவாயை, இதுபோல விலை உயர்வு மூலம் உறிஞ்சி வருகிறது. எனவே மதுப்பிரியர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முதல் மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம், மதுப்பிரியர்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பணிகளைச் செய்து வருகிறது. மது குடிப்பவர்கள் மற்றவர்கள் முன் மானம் மரியாதையுடன் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார் அவர்.

’தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்’ என்ற பெயரும், அதன் செயல்பாடுகளும் மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் வித்தியாசமானதாக இருந்தாலும், தங்களது நோக்கமே மதுப் பழக்கத்தில் இருந்து மக்களைக் காப்பதுதான் என்கிறார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x