Published : 01 Apr 2016 09:36 PM
Last Updated : 01 Apr 2016 09:36 PM

தேமுதிகவைக் கரைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: ஸ்டாலின்

தேமுதிகவைக் கரைக்க வேண்டிய செயலில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் தேமுதிக தானாகவே கரைந்து கொண்டிருக்கின்றது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இங்கு உரையாற்றிய சிலர் இன்றைக்கு எங்களுக்கு விடியல் கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே விடியல் கிடைக்கப் போகிறது, என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு திமுகவில் நீங்கள் வந்துச் சேரக் கூடிய இந்த நிலையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இன்றைக்கு விமர்சனம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஏதோ தேமுதிகவை கரைக்கின்ற முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாகவும், ஸ்டாலின் ஆப்பரேட்ஸ் என்று செய்திகள் வெளிவரக்கூடிய நிலை இன்றைக்கு ஒருபுறம் நடந்து கொண்டுள்ளது. அத்தகைய செயலில் நானோ, கழகத்தில் இருக்கக் கூடியவர்களோ ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் தேமுதிக தானாகவே கரைந்து கொண்டிருக்கின்றது.

இந்த சமுதாயத்தைக் காப்பாற்ற, இந்த நாட்டைக் காப்பாற்ற, இந்த இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் இந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கொரு நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் எதிர்வரும் மே மாதம் 16-ம் தேதி. அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்கள் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி தருவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவின் ஆட்சி, கருணாநிதி தலைமையில் உருவாக வேண்டும் என்று எண்ணுவது ஒருபக்கம், அதே நேரத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி உடனடியாக தூக்கி எறியப்பட வேண்டும் என்ற நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், சங்கிலி பறிப்பு என தமிழ்நாடு முழுவதும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று கொண்டுள்ளது.

இன்னொருபுறம் விலைவாசி விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாமே உயர்ந்து விட்டது. அதேபோல ஏறக்குறைய 84 லட்சம் இளைஞர்கள், பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., பி.காம், எம்.காம்., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., என்று படித்துப் பட்டம் பெற்றிருக்கக் கூடிய பட்டதாரிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து விட்டு, இன்னும் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கொடிய நிலை இன்றைக்கு அதிமுக ஆட்சியினால் உருவாகி இருக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x