Published : 07 Mar 2022 07:28 AM
Last Updated : 07 Mar 2022 07:28 AM
கோவை: கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலராகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 57-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முயற்சித்து வந்தார். வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே, தனதுவார்டில் தேர்தல் அலுவலகம் திறந்துவைத்து, வாக்கு சேகரித்தார். இவர்தான் மேயர் வேட்பாளர் என கருத்துகள் பரவின.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் அவர் இடம்பெறாததால், ஏமாற்றத்துக்குள்ளானார்.
இந்நிலையில். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோவை திமுக செயற்குழுக் கூட்டம்கடந்த பிப்ரவரி 26-ல் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய மீனா ஜெயக்குமார், “மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் என் அரசியல் வளர்ச்சியை தடுத்தார். தலைமைக்கு தவறான தகவல்களை அளித்து எனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் செய்தார். உங்கள் மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியைத் தடுக்க நீங்கள் யார்?” என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதனால், அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக மீனா ஜெயக்குமார் நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, “செயற்குழு கூட்டத்தில் மீனா ஜெயக்குமார் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது கட்சிதலைமையிடம் தனதுபுகாரை எழுத்துப்பூர்வமாக அளித்து இருக்கலாம்” என்றனர்.
அதேசமயம் கட்சியில் மாவட்டப் பொறுப்பாளரின் குறைகளைசுட்டிக் காட்டினால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் மீது விசாரிக்காமல், புகார் கூறியவரை கட்சியில் இருந்து நீக்குகிறது திமுக என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT