Published : 07 Mar 2022 08:11 AM
Last Updated : 07 Mar 2022 08:11 AM
தஞ்சாவூர்: ‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேதமான சாக்குகளை அகற்றிவிட்டு, அதில் உள்ள நெல்மணிகளை வேறு சாக்குகளுக்கு மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த குறுவை பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமார் 26 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 13 உள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் 66 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழைகாரணமாக திறந்தவெளி கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சாக்குகள் சேதமாகின.
தஞ்சாவூர் மாவட்டம் பருத்தியப்பர்கோவில் திறந்தவெளி கிடங்கு உட்பட பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் சேதமாகி, அதில் இருந்த நெல்மணிகள் சிதறி ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுவது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணை மேலாளர் முத்தையா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், பருத்தியப்பர்கோவில் சேமிப்பு கிடங்குக்கு சென்று, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு சேதமடைந்தநெல் மூட்டைகளிலிருந்து கொட்டியிருந்த நெல்மணிகளை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், சேதமான சாக்குகளை அகற்றிவிட்டு, அதில் உள்ள நெல்மணிகளை புதிய சாக்குகளில் நிரப்ப பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். இதேபோல, மாவட்டத்தில் 18 இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் குறித்தும் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர்நா.உமாமகேஸ்வரி கூறியது: திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்திருந்தோம். மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சாக்குகள் நனைந்து சேதமானதால், வெயில் மற்றும் காற்றுக்காக அவ்வப்போது திறந்துவைத்து, பின்னர் மூடி வருகிறோம். மழையால் சாக்குகள் மட்டுமே சேதமாகியுள்ளன. நெல்மணிகள் சேதமாகவில்லை. அதன் தரமும் குறையவில்லை.
சேதமான சாக்குகளை உடனடியாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சாக்குகளில் நெல்மணிகளை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சேதமான சாக்குகளை அகற்றிவிட்டு, அதில் உள்ள நெல்மணிகளை புதிய சாக்குகளில் நிரப்ப உத்தரவிட்டனர். இதேபோல, மாவட்டத்தில் 18 இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT