Published : 07 Mar 2022 08:08 AM
Last Updated : 07 Mar 2022 08:08 AM
கரூர்: கரூர் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலருக்கு ரூ.1 கோடி பரிசுடன் பாராட்டு விழா நடத்தப்படும் என தேர்தலில் தோல்வியடைந்த சுயேச்சை வேட்பாளர் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
தேர்தலில் தோல்வி
கரூர் மாநகராட்சி 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டவர் சு.ராஜேஸ்கண்ணன். இந்த வார்டில் 6 பேர் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் மா.ரமேஷ் 1,596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரா.செல்வன் 427 வாக்குகள் பெற்று 2-ம் இடம்பெற்றார். சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்கண்ணன் 335 வாக்குகள் பெற்று அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 3-ம் இடம் பெற்றார்.
இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த ராஜேஸ்கண்ணன், கரூரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். அதில், கரூர் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு, கரூர் காமராஜபுரத்தில் மார்ச் 7-ம் தேதி (இன்று) ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன், பாராட்டு விழா நடத்தப்படும். நேர்மையான முறையில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த சுவரொட்டி அரசியல் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜேஸ்கண்ணனிடம் கேட்டபோது, ‘‘இது யாரையும் கிண்டல் செய்யும் நோக்கில் ஒட்டப்படவில்லை. தேர்தலில் வாக்காளர்களுக்கு பல இடங்களில் பணம் விநியோகிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் எவ்வித வழக்கும் பதியவில்லை.
மக்களிடம் கடிதம் அவசியம்
நேர்மையான முறையில் வெற்றிபெற்றவரை கவுரவிக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒரே ஒரு வார்டு உறுப்பினர் தொடர்பு கொண்டு நேர்மையாக வெற்றி பெற்றதாக தெரிவித்தார். ரூ.1 கோடியை சும்மா கொடுக்க முடியாது. எனவே, மக்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT