Published : 07 Mar 2022 08:04 AM
Last Updated : 07 Mar 2022 08:04 AM
விருத்தாசலம்/மதுரை: கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கடலூர் திமுக எம்எல்ஏவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று உத்தரவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கடலூர் மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி அறிவிக்கப்பட்டிருந்தார். அதே நேரத்தில் திமுகவின் மற்றொரு கவுன்சி லரான கீதா என்பவரும் மேயருக்கு போட்டி வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கடந்த 4-ம் தேதி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது ஒரு தரப்புக்கு ஆதரவான திமுக கவுன்சிலர்களை, எதிர் தரப்பினர் கடலூர் அலுவலகத்துக்கு வரவிடாமல் தடுத்தனர். இந்த பிரச்சினைகளுக்கு நடுவே கடலூர் மேயர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சுந்தரிக்கு ஆதரவாக 19 பேரும், போட்டி வேட்பாளராக களமிறங்கிய கீதாவுக்கு ஆதரவாக 12 பேரும் வாக்களித்தனர். 14 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இதையடுத்து கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக சுந்தரி வெற்றிபெற்றார்.
மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டது குறித்து கடலூர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார். இதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, போட்டி வேட்பாளரை நிறுத்திய பின்னணியில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையின் பேரில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்எல்ஏ ஐயப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி நேற்று உத்தரவிட்டார்.
இதனிடையே மாநகராட்சித் தேர்தலின்போது எங்களையே செலவுகளை செய்யச் சொல்லி, மேயர் பதவிக்கு உத்தரவாதம் அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் மாற்றிதுரோகம் செய்துவிட்டனர். அதனால்தான் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கீதா தரப்பினர் கூறி வருகின்றனர்.
திருமங்கலம், உசிலம்பட்டி
இதேபோன்று, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் தலைவர் வேட்பாளராக ரம்யா, துணைத் தலைவர் வேட்பாளராக ஆதவன் ஆகியோரை திமுக தலைமை அறிவித்தது. எனினும், நகரப் பொறுப்பாளர் முருகன், தனதுமருமகள் சர்மிளாவை போட்டி வேட்பாளராக்கி, தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் வந்தார். போதிய கோரம் இல்லை எனக் கூறி, தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
உசிலம்பட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கு செல்வி, துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர் தேன்மொழி ஆகியோரை திமுகவும் காங்கிரஸும் அறிவித்த நிலையில், தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளராக களமிறங்கிய திமுக கவுன்சிலர் சகுந்தலா வெற்றி பெற்றார்.
இதையடுத்து, திருமங்கலம் நகரப் பொறுப்பாளர் சி.முருகன், உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ்.தங்கமலைப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் இ.சுதந்திரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை எம்.ரவிக்குமார், உசிலம்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் மொ.சந்திரன் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT