

கோவை மாநகர் மாவட்டம் உட்பட பாஜகவில் 8 மாவட்டங்களின் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்தார். கோவை மாவட்டமானது பாஜகவில் கோவை தெற்கு, வடக்கு, மாநகர் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மாநகர் மாவட்டத்தில் மாநகராட்சியின் 100 வார்டுகள் வருகின்றன.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 97 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இருப்பினும் 5 வார்டுகளில் 2-ம் இடம்பிடித்தது. மாநகரில் 72,393 வாக்குகளைப் பெற்றது. இது, மொத்தம் பதிவான வாக்குகளில் 8.66 சதவீதமாகும்.
மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம் குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: கலைக்கப்பட்ட பொறுப்புகளுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதை நோக்கமாக கொண்டு கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 8 மாவட்டங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்னும் சில மாவட்டங்களில் சீரமைப்பு இருக்கும். அண்மைக்காலமாக பாஜக சார்பில் தமிழகத்தில் இருந்து எம்பிக்கள் யாரும் தேர்வாகவில்லை. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு முக்கிய தொகுதி கோவை. நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக, நாம்தமிழர், மநீம ஆகிய கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே, மற்ற கட்சிகளுக்கு சரியான மாற்று பாஜகதான் என்பதை நிலைநிறுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியில் இருந்தும் கட்சியில் நிறையபேர் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ற பொறுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியில் 7 அணிகள், 20 பிரிவுகள் உள்ளன. இதில் முந்தைய நிர்வாகிகள், புதியவர்கள் என அனைவரையும் இணைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.