Published : 07 Mar 2022 06:53 AM
Last Updated : 07 Mar 2022 06:53 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேனாடுகம்பையில் ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில், இந்து விழிப்புணர்வு ராம ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. அமைப்பின் நிறுவனத் தலைவர் வேலு தொடங்கி வைத்து பேசும்போது, "ஓராண்டாக தமிழகத்தில் இந்து மதத்துக்கு அநீதி நடக்கிறது.இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இந்து மதத்துக்கு எதிராக செயல்படும் அரசை கண்டித்தும், இந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. வாரம்தோறும் இந்த யாத்திரை நடத்தப்படும். இந்த ரத யாத்திரை தேனாடுகம்பையில் தொடங்கி சின்னகுன்னூர், எப்பநாடு, மொரக்குட்டி, இடுஹட்டி, கொதுமுடி, தூனேரி, அணிக்கொரை வழியாக மீண்டும் தேனாடுகம்பை வர திட்டமிடப்பட்டது" என்றார்.
மாநிலச் செயலாளர் சக்திவேல், துணைத் தலைவர் முனியப்பன், இளைஞரணி செயலாளர் வைரமுத்து, நீலகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், ரத யாத்திரைக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், தேனாடுகம்பையில் ஊரக டிஎஸ்பி ஞானரவி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடங்கிய சிறிது நேரத்தில் ரத யாத்திரையை நிறுத்தி, ராஷ்ட்ரிய இந்து மகா சபா அமைப்பினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர். ரதம் பறிமுதல் செய்யப்பட்டு, தேனாடு கம்பை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT