

கோடை தொடங்கும் முன்பே சேலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சேலம் அரசு நீச்சல் குளத்தில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மாதங்களில் நீச்சல் குளங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள அரசு நீச்சல் குளமும் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்நிலையில், கோடை தொடங்கும் முன்னரே வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் அரசு நீச்சல் குளத்துக்கும் இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நீச்சல் குளத்துக்கு வந்திருந்த சிலர் கூறியதாவது:
சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் சேலத்தில் நீர் நிலைகளில் நீராடுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், சேலம் அரசு நீச்சல் குளம் அனைவருக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. விடுமுறை நாட்களில் நீச்சல் குளத்தில் குளிக்கவும், நீச்சல் பழகவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி நீச்சல் குளம், ஆடை மாற்றும் அறைகள் உள்ளது. எனவே, இங்கு வந்து செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக் கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு நீச்சல் குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.59 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.