

சென்னை: சிறந்த நூல்களே மனித வாழ்வை நல்வழிப்படுத்தும் என்று சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவில் நீதிபதி அரங்க மகாதேவன் கருத்து தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த பிப்.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 25 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி அரங்க மகாதேவன் பேசியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை கற்கள், பனை ஓலைகள் ஆகியவற்றில் வரலாற்றை நமது முன்னோர் பதிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகள் தங்களின் வரலாறுகளை முறையாகப் பதிவு செய்யவில்லை.
தங்களது வரலாற்றை யார் முறையாக பதிவு செய்கிறார்களோ அந்த சமூகமே அறிவு சார்ந்த சமூகமாகக் கருதப்படுகிறது. அதற்குச் சான்றாக தமிழகத்தில் தொல்காப்பியம் விளங்குகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டங்களில் எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல், கோலப்ப ஐயர் உள்ளிட்டோர் ஏராளமான நூல்களைப் பதிப்பித்து நமக்கு வழங்கியுள்ளனர். 1760-ம் ஆண்டிலிருந்து 1990 வரை 8,600 புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறந்த நூல்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தும். ஒவ்வொரு பதிப்பாளர்களும் தங்களது வணிகத்தை தாண்டி சமூகத்தைச் சீர்படுத்தும் பணிகளையும் செய்து வருகின்றனர். அறம் சார்ந்த வாழ்க்கையில் பயணிக்க வாசிப்பு வழிகாட்டும். இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பபாசி தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி மொத்தம் 19 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், வரலாற்று நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கு இந்த ஆண்டு அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும், புத்தக விற்பனையும் சுமார் ரூ.15 கோடியை எட்டியதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.