

சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் 79 வயது முதியவருக்கு நுண் துளை முறையில் இதய வால்வு மற்றும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் நவீன சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் வி.வி.பாஷி, ஏ.பி.கோபால முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
இதய வால்வு சுருக்க நோயால் அவதிப்பட்டுவந்த ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி அருணாச்சலம்(79) கடந்த மாதம் சிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அவர் ஏற்கெனவே மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். வயது மற்றும் வேறு சில உடல்நலக் குறைபாடு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது நல்லதல்ல என மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அதனால் அவருக்கு நுண்துளை சிகிச்சை முறையில் இதய வால்வு மற்றும் பேஸ் மேக்கர் கருவி பொருத்த முடிவு செய்தனர்.
சில நாடுகளில் மட்டுமே
உலகில் ஒரு சில நாடுகளில் மட்டுமே நுண்துளை சிகிச்சை முறையில் இதய வால்வு மற்றும் பேஸ் மேக்கர் கருவி பொருத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அறுவை சிகிச்சை இல்லாமல், நோயாளிகளை முழுவதும் மயக்க நிலைக்கு கொண்டுசெல்லாமல் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தையல் போட வேண்டிய அளவுக்கு காயம் ஏற்படாது. பெரிய அளவில் ரத்த இழப்பு இருக்காது. சிகிச்சை முடிந்து 3 நாட்களில் நோயாளி வீட்டுக்கு செல்லலாம். ஒரே வாரத்தில் முழுவதும் குணமடையலாம்.
இதே பாரம்பரிய அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றால் நோயாளி முழுவதுமாக குணமடைய 2 மாதங்கள் ஆகும். நெதர்லாந்து நாட்டில் இருந்து இதற்கான வால்வு இறக்குமதி செய்யப்பட்டது. வால்வு விலை மட்டும் ரூ.15 லட்சம். மேற் கொண்டு சிகிச்சைக்கு ஓரிரு லட்சங்கள் ஆகும். நம் நாட்டில் வால்வு இறக்குமதிக்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும். உள்நாட்டிலேயே வால்வு தயாரிக்கும் தொழில்நுட் பம் உருவாகும் நிலையில் சிகிச்சைக்கான செலவு பெருமள வில் குறையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.