

பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தி.மலையில் கிரிவலம் வந்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருகே பாலியப்பட்டு கிராமத்தை மையமாக வைத்து சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாலியப்பட்டு பொது மக்கள் போராட்டத்தை தொடங்கினர். சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தினர், போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது போராட்டம் 75-வது நாளாக நேற்றும் நீடித்தது.
திருவண்ணாமலை கிராம பாதையில், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, “பொது மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. மேலும்,பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளையும் அகற்ற முடிவெடுத்துள்ளனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்றனர்.
பின்னர், சிப்காட் அமைக்கஎதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, கிரிவலம் வந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, 50-வது நாள் போராட்டத்தில், தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.