

மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் நேற்று எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என கரகோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோயில் சித்திரை திருவிழா ஏப்.18-ம் தேதி தொடங்கியது. அழகர்கோயிலில் இருந்து 20-ம் தேதி புறப்பட்ட கள்ளழகருக்கு வியாழக்கிழமை மதுரை எல்லையான மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. எதிர்சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வழி நெடுகிலும் உள்ள மண்டபகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்து தங்கினார்.
அழகரை வரவேற்கும் வகையில் மதுரையின் வட பகுதியில் பந்தல், அலங்கார விளக்குகள், மேள, தாளம், ஆட்டம், பாட்டம் என விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஆண்டாள் மாலை சூடிய அழகர்
கோயிலில் அழகருக்கு நேற்று அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து தங்கப்பல்லக்கில் வந்த அழகர் தங்கக்குதிரை வாகனத்துக்கு மாறி ஆயிரம்பொன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த தரிசனத்தைக் காண தல்லாகுளம் பகுதியில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் வந்த கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி கோரிப்பாளையம் வழியாக வைகை வடகரையில் உள்ள ஆழ்வார்புரம் வந்தடைந்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் வைகை
வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க வீரராகவப் பெருமாள் அதிகாலை 4 மணிக்கே ஆற்றில் காத்திருந்தார். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் காலை 6.05 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். வீரராகவப் பெருமாள் எதிரே வந்து அழகரை அழைத்துச் சென்றார். ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியை அழகர் 3 முறை சுற்றி வந்தார்.
அப்போது அழகரை தரிசிக்க தமிழகத்திலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரண்டிருந்தனர். இவர்கள் பக்திப் பரவசத்தோடு கோவிந்தா என்ற கோஷங்களை எழுப்பியும், சர்க்கரை நிரப்பிய சொம்பில் சூடம் ஏற்றியும் தரிசித்தனர். ஆற்றில் குவிந்திருந்த பக்தர்கள் தண்ணீரை வாரி இறைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முடி இறக்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
சித்திரை திருவிழாவுக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 நாட்களாக ஆற்றில் பாய்ந்தோடியது. அழகர் கால் பதிக்கும் இடத்தில் சந்தனம், மலர்கள் கலந்து நறுமணத்துடன் தண்ணீர் ஓடியது.
தீர்த்தவாரி
சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காலை 7.20 மணிக்கு ஆற்றில் இருந்து புறப்பட்ட அழகருக்கு மதிச்சியம் ராமராயர் மண்டபம் அருகே தீர்த்தவாரி நடந்தது. இதற்காக அழகர் வேடமிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். தோல் பைகளில் தண்ணீரை நிரப்பியபடி காத்திருந்தோர், அழகரை குளிர்விக்கும் வகையில் அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அண்ணா நகர் வழியாக இரவில் வண்டியூர் சென்ற அழகர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.
இன்று தசாவதாரம்
இன்று காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கிறார். இன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். நாளை காலை மோகினி அவதாரத்தில் உலாவரும் அழகர் தல்லாகுளம் வருகிறார். அங்கு நாளை மறுநாள் (ஏப். 25) அதிகாலை பூப்பல்லக்கில் காட்சி தந்தபின் மீண்டும் மலைக்கு புறப்படுகிறார்
பச்சை பட்டின் மகிமை
அழகர் ஆற்றில் இறங்கும்போது என்ன வண்ணத்திலான உடை அணிருந்திருந்தார் என்பதை பக்தர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்ப்பர். பச்சை பட்டு எனில் நல்ல மழையுடன் செழிப்பும், வெண் பட்டு எனில் பருத்தி உள்ளிட்ட பயிர் விளைச்சல் அமோகம் என்பதையும், சிவப்பு பட்டு எனில் மிளகாய் மற்றும் சிவப்பு நிற தானிய விளைச்சலுடன் வறட்சி நிலவும் என்பதையும் உணர்த்துவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று பச்சை பட்டு உடுத்திதான் அழகர் ஆற்றில் இறங்கினார்.
இதுகுறித்து தல்லாகுளம் பெருமாள் கோயில் பட்டர் ஒருவர் கூறும்போது, ‘அழகர் தங்கக்குதிரை வாகனத்துக்கு மாறும்போது சிறப்பு அலங்காரம் நடக்கும். அவரது உடல் முழுவதும் வெண் பட்டை சுற்றி, பச்சை பட்டை போர்த்துவோம். இந்த புத்தாடைகளை கோயில் நிர்வாகம் வாங்கித்தந்துவிடும். ஆண்டுதோறும் பச்சை பட்டு மட்டுமே உடுத்தியிருப்பார். இதன் மூலம் நாடு செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலைக்கும். பல வண்ண உடைகளை ஒரு பெட்டியில் போட்டு, அதில் ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு உருவி எடுத்து அந்த ஆடையை அழகருக்கு அணிவிப்பது என்பது வெறும் கதைதான். நம்பிக்கையூட்டும் அழகர் குறித்த பல்வேறு கதைகளுடன் இதுவும் இருந்துவிட்டு போகட்டுமே” என்றார்.