Published : 06 Mar 2022 08:08 AM
Last Updated : 06 Mar 2022 08:08 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப் பணி அந்தந்த துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்தாண்டு போல இந்தாண்டும் காகிதமில்லா பட்ஜெட் மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இதில் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தொகை வழங்குவதற்கான திட்டம் குறித்த அறிகுறிகூட இல்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், "முக்கிய திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்று முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தார். அந்த திட்டம் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT