Published : 06 Mar 2022 06:38 AM
Last Updated : 06 Mar 2022 06:38 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு வரும் 10, 11, 12 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். அரசு கடந்த 10 மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஆளுநர் உரை, முதல்வரின் செய்தி வெளியீடு மற்றும் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதி நிலை அறிக்கை, அமைச்சர்களால் மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என 1,704 அறிவிப்புகளில் இதுவரை 80 சதவீதத்துக்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளின் கீழ் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிந்து கொள்வதற்காகவும் அவற்றை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்காகவும் ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதுவரை வனத்துறை அலுவலர்கள் முதல்வர் ஆய்விலோ, மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை. முதல்முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வனத்துறை தொடர்பான திட்டங்களை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இந்த மூன்று நாட்கள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார்.
மேலும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிந்து, அதனடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பாக மார்ச் 18-ம் தேதி சட்டப்பேரவை கூட வாய்ப்புள்ளதாக தகவல் ஏற்கெனவே வெளியாகியானது. அத்துடன், கடந்தாண்டை போல் மறுநாள் மார்ச் 19-ம் தேதி வேளாண் துறைக்கான தனி நிதிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொது, வேளாண் பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டுகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அண்மையில் கருத்து கேட்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் தயாரிப்புப் பணி அந்தந்த துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்தாண்டு போல இந்தாண்டும் காகிதமில்லா பட்ஜெட் மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இதில் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தொகை வழங்குவதற்கான திட்டம் குறித்த அறிகுறிகூட இல்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், "முக்கிய திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்று முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தார். அந்த திட்டம் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT