

தமிழக விவசாயிகளின் நலன் கருதி, மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைதடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்காக அதன்2022-23 பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
இறையாண்மைக்கு எதிரானது
மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மை, கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது.
2007 பிப்.5-ம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும்,2018 பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகேதாட்டுவில் பெரிய அணை கட்டநிதி ஒதுக்குவது நியாயம் அல்ல.
இந்த அறிவிப்பு, வரும் கர்நாடக அரசின் பேரவைத் தேர்தலைமனதில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது.
எப்படி இருப்பினும், தமிழகவிவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக அரசின் மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கண்டனம்
கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்தவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு:
மேகேதாட்டு திட்டத்துக்கு இடையூறு செய்ய தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று கர்நாடகஎதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஒரு வாரம் முன்பு கூறியிருந்தார். அதற்கு ஒருபடி மேலே சென்று, மேகேதாட்டு அணை மற்றும் பெங்களூரூ குடிநீர் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடகஅரசு அறிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். நதிநீர் பங்கீட்டில் தமிழக உரிமையை பறிக்கும் இந்தஅறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் குடிநீர் தேவை, பாசனத் தேவைஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து,அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்குமான நீரின் அளவைகாவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா தரவேண்டும். ஆனால், உபரி நீர்தான் நமக்கு கிடைக்கிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அணை கட்ட நிதி ஒதுக்குவது சட்ட விரோதமான செயல். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முற்றிலும் முரணான வகையில், கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசுகட்ட முடியாது. கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்துநிறுத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் மூலமாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.