Published : 06 Mar 2022 09:54 AM
Last Updated : 06 Mar 2022 09:54 AM

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 63 பதவிகளுக்கு தேர்தல் தள்ளிவைப்பு - மறைமுக தேர்தலில் 984 பதவியை திமுக கைப்பற்றியது: 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் அதிமுக வெற்றி

சென்னை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் 984 இடங்களை திமுக கைப்பற்றியது. 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் அதிமுக வெற்றி பெற்றது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 12,820 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,296 மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் 4-ம் தேதி நடைபெற்றது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில், மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ஏராளமான இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதிமுகவினர் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, ஒருவர் ஒருவராக பதவி விலகி வருகின்றனர்.

இதற்கிடையே 4-ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் கட்சி வாரியாக வெற்றி பெற்றோர் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 மேயர் பதவிகள், 15 துணை மேயர் பதவிகள், 125 நகராட்சித் தலைவர் பதவிகள், 98 துணைத் தலைவர் பதவிகள், 395 பேரூராட்சித் தலைவர் பதவிகள், 331 துணைத் தலைவர் பதவிகள் என 984 பதவிகளை திமுககைப்பற்றியுள்ளது.

மறைமுக தேர்தலின்போது சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலஇடங்களில் வார்டு உறுப்பினர்கள் யாரும்பங்கேற்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் 63 பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

54 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 2,008 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதன்படி, மாநகராட்சியில் (164 இடங்கள்) 24 சதவீதம், நகராட்சியில் (638)26.86 சதவீதம், பேரூராட்சியில் (1,206) 35.56 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. ஒரு மாநகராட்சியைக்கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், பிற கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு 8 நகராட்சிகள், 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை கைப்பற்ற அதிமுக முனைப்பு காட்டியது.

ஆனால், மறைமுகத் தேர்தலில் நகராட்சியில் 2 தலைவர் பதவிகள், 7 துணைத்தலைவர் பதவிகளையும், பேரூராட்சிகளில் 18 தலைவர் பதவிகள், 27 துணைத் தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியது.

மறைமுகத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை கட்சியில்இருந்து நீக்கும் பணியை அதிமுகதலைமை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 11 வார்டு உறுப்பினர்கள் உட்பட 54 அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு முன்னதாக, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x