

கோவையின் மேற்கு பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால் இடைப்பட்ட மலையடிவார பகுதிகளையே யானைகளும், பிற வன உயிரினங்களும் தங்கள் வாழ்விடத்துக்காகவும், உணவு தேவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றன. சில இடங்களில் வனத்தையொட்டி காடாக இருக்கும் பகுதிகள் அரசு புறம்போக்கு நிலங்களாக இருப்பதால், அவற்றுக்கு வனத்துறை போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை உள்ளது. வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிலங்களை, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர காப்பு நிலங்களாக (ரிசர்வ் லேண்ட்) மாற்ற வேண்டும். அதன்படி, கோவை தென்கரை கிராமத்தில் உள்ள 444.69 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் காப்பு நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பிறப்பித்துள்ள அறிவிக்கையில், “கோவை மாவட்டம், பேரூர் வட்டம், தென்கரை கிராமத்தில் 179.96 ஹெக்டேர் நிலத்தை தாவர, உயிரின, விலங்கினங்கள், பறவைகள் புகலிடத்துக்காகவும், வனப்பகுதியை பாதுகாப்பதற்காக வும், சுற்றுப்புற சூழலை பாதுகாப் பதற்காகவும், மனித - வன உயிரின மோதலை தவிர்ப்பதற்காகவும் காப்பு நிலமாக மாற்ற உத்தேசிக்கப் பட்டது. அதன்படி, 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு 26-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் வடக்கு எல்லையாக பூலுவப்பட்டி கிராம பட்டா நிலங்கள், தெற்கில் போளுவாம்பட்டி ஒதுக்க காடுகள், கிழக்கில் தென்கரை கிராம பட்டா நிலங்கள், மேற்கில் பூலுவப்பட்டி கிராம பட்டா நிலங்கள் எல்லைகளாக இருக்கும்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பால் என்ன பயன்?
இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, “புறம்போக்கு நிலம் காப்பு நிலமாக மாற்றப் பட்டதால், அங்கிருக்கும் மரங்களையாராவது வெட்டினால் வனத்துறை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். வனம் அல்லாத பிற பணிகளுக்காக அந்த நிலத்தை யாரும் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். வரும் நாட்களில் தமிழ்நாடு வனச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அந்த நிலத்தை காப்புக் காடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப் படும்” என்றனர்.
கோவையில் இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப் பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி வட்டத்தில் வனத்தையொட்டி வருவாய்துறை கட்டுப்பாட் டில் இருந்த 1,049 ஹெக்டர் நிலங்கள் காப்பு நிலங்களாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.