

கோவை அவிநாசி சாலையில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள அவிநாசி சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதை அமைக்கப்படுகிறது. தலா நான்கு இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம், 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமைக்கப்பட உள்ளது.
தூண்கள் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் ஆங்கில எழுத்தான ‘டி’ வடிவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ‘டி’ வடிவில் கான்கிரீட் அமைக்கப்பட்ட இடங்களின், தூண்களை இணைத்து சாலைக்கான கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், அவிநாசி சாலையில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்க, சர்வீஸ் சாலைகள் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியையும் நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேம்பாலப் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘அவிநாசி சாலையும், திருச்சி சாலையும் ஒன்றுக்கு ஒன்று மாற்றுச்சாலைகளாக உள்ளன. இச்சாலையில் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் விமான நிலைய சந்திப்பு, பீளமேடு, ஹோப்காலேஜ், நவ இந்தியா, எஸ்.ஓ.பங்க், லட்சுமி மில் உள்ளிட்ட இடங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நெரிசல் பகுதிகளில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும். மேம்பாலப் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அவிநாசி சாலை மேம்பாலத்துக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது 254 தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. பீளமேடு விமான நிலையம் அருகே, தூண்கள் மீது, வாகனங்கள் செல்லும் வகையிலான கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணி தொழில்நுட்ப முறையில் நடைபெறுகிறது. அதாவது, தளங்கள் தனியிடத்தில் அமைக்கப்பட்டு, லிப்ட் இயந்திரம் மூலம் தூண் மீது ஏற்றி பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை, அவிநாசி சாலை மேம்பாலப் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 10.50 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் சாலைகள், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். இச்சாலையில் 5 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன. தவிர, 3 இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல், 3 இடங்களில் சிறுபாலங்களை திரும்பக் கட்டுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏறு தளங்கள், இறங்கு தளங்கள், சர்வீஸ் சாலைகள் அமைக்க 2.2 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலத்தை கையகப்படுத்த மாவட்ட வருவாய் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 500 தொழிலாளர்கள் மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.