

தரமான கல்வியை வழங்குவற்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையில் சிஷ்யா பள்ளியின் பொன்விழா ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:
கல்வி என்பது மனித சமுதாயத்தின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. தரமான கல்விதான், ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி, அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய கல்வியை வழங்கும் நிறுவனமாக சிஷ்யா பள்ளி செயல்படுகிறது.
“குழந்தைகளிடம் இருந்து குழந்தைப் பருவம் களவாடப்படக் கூடாது" என்பது இப்பள்ளியை உருவாக்கிய தாமஸின் சிந்தனை. இது இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வளர்த்துக் கொள்ளவேண்டிய, உணர வேண்டியசிந்தனையாகும். இப்பள்ளியில்தான் எனது பேரன், பேத்தி படிக்கிறார்கள். இப்பள்ளியில் அவர்கள் படிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள்தான். என்னுடைய அன்புக்குரியவர்கள்தான். அதனால்தான் தரமான கல்வியை வழங்குவற்காக தமிழக அரசுபல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
எனது பிறந்த நாள் அன்று ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தைதொடங்கிவைத்தேன். கோடிங், ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம்.
கல்வி கற்க எந்தத் தடையும்இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் நான். அந்தச் சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை ‘திராவிட மாடல் அரசு’ என்று நான் கூறி வருகிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.