

அரசியல் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகே.சம்பத்தின் 97-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, ஈவிகே.சம்பத் படத்துக்கு மத்திய முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆங்காங்கே சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையும், இரு மாவட்டச் செயலர்கள் மீது எடுத்தநடவடிக்கையும் இந்திய அரசியலில் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டியவை.
பல அரசியல் கட்சிகள், பல்வேறு அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், மதச் சார்பற்ற கூட்டணியை உருவாக்கி, அதை மிகப் பெரிய கொள்கைக் கூட்டணியாக மாற்றியுள்ளார். இந்தக் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. தமிழக மக்களை மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.
அரசியலில் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றுவதில் முன்னணியில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நடவடிக்கையின் மூலம் அவரது பெருமையும், அவரின் பெயரும் இமாலய அளவில் உயர்ந்து நிற்கிறது. பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்குப் பிறகு தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் ஸ்டாலின். கட்சி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் ஆர்.தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, அசன் மவுலானாஎம்எல்ஏ கலந்துகொண்டனர்.