Published : 06 Mar 2022 07:45 AM
Last Updated : 06 Mar 2022 07:45 AM
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்றுவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் எஃப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால்தான் மருத்துவராகப் பணியாற்ற முடியும்.
இவ்வாறு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.54 லட்சம், மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் தொடர்பாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ரூ.29,400-ஆக குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மேலும், பயிற்சி மருத்துவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இந்தியாவில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல, உதவித்தொகை உள்ளிட்ட பிற வசதிகளை வெளிநாட்டில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம், அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி கூறும்போது, "வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் உள்ளூரில் பயிற்சி மேற்கொள்ள அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3.54 லட்சத்தை, ரூ.29,400-ஆக தமிழக அரசு குறைத்தது.
இந்நிலையில், மருத்துவமனைகளும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இந்தியாவில் படித்த மாணவர்கள் பயிற்சி பெறும்போது வழங்கப்படும் உதவித்தொகை, வசதிகளை, வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளுறை மருத்துவர் பயிற்சியை சிரமமின்றி, மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT