Published : 14 Apr 2016 03:53 PM
Last Updated : 14 Apr 2016 03:53 PM

திமுக கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்: கிருஷ்ணசாமி நம்பிக்கை

திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து, திருவில்லிபுத்தூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

திமுக கூட்டணியில், புதிய தமிழகம் கட்சிக்கு தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியும், திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகு தியும், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறது. எங்களது வேட்பாளர்கள் பெயர் வருகிற 15, 16-ம் தேதிகளில் அறிவிக்கப்படும். இந்த 4 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.

திருவில்லிபுத்தூரில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுவாக வார்டு, கிளை வாரியாக ஒருங்கிணைந்த குழுவை உருவாக்கி வாக்காளர்களிடம் கருத்துகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகால அவல ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விடுதலை பெற ஒரே மாற்றான திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் வேதனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அமைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, எங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். திருவில்லிபுத்தூர் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வெற்றிபெறும்.

ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் 2 பேர் இறந்துள்ளது வேதனைக்குரியது. பல்லாயிரக்கணக்கான மக்களை கூட்டமாக திரட்டி பொதுக் கூட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும். மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் வழங்க பெட்டிபெட்டியாக பணம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த நவீனமான முறைகளை தேர்தல் ஆணையம் கையாள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x