வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் ஹோட்டல் உரிமையாளர்களின் பிரியாணி திருவிழா: 10 ஆயிரம் பேருக்கு பிரசாதமாக விநியோகம்
மதுரை அருகே முனியாண்டி கோயில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பலர் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் அசைவ ஹோட்டல்களை நடத்துகின்றனர். இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது.
தங்கள் தொழில் செழிக்க ஆண்டுதோறும் இக்கோயிலில் பிரியாணி சமைத்து பல்லாயிரம் பேருக்கு வழங்கும் விழாவை நாயுடு, ரெட்டியார் சமூகத்தினர் நடத்தி வருகின்றனர். ரெட்டியார் சமூகத்தினர் சார்பில் நேற்று முன்தினம் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக, முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள், அவர்களது குடும்பத்தினர், பணியாளர்கள் என பல ஆயிரம் பேர் வடக்கம்பட்டியில் திரண்டனர்.
மேளதாளத்துடன் நடந்த பால் குடம், பூத்தட்டு ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள், கிராமத்தினர் நேர்த்திக்கடனாக வழங்கிய 115 ஆடுகள், 523 கோழிகள் மற்றும் சேவல்கள் கோயில் முன்பாக பலியிடப்பட்டு, பிரியாணி சமைக்கும் பிரத்தியேக சமையல் கலைஞர்களைக் கொண்டு 2 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது.
விடிய, விடிய பல அண்டாக்களில் தயாரான பிரியாணி முனியாண்டி சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வடக்கம்பட்டியை சுற்றியுள்ள கிராமத்தினர் உள்ளிட்ட 10 ஆயிரம் பேர் பிரியாணி பிரசாதத்தை பெற்றுச் சென்றனர். நன்கொடையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெட்டிகளில் பிரியாணி வழங்கப்பட்டது.
விழா குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் காரைக்குடியில் 1937-ல் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பால் நாடெங்கும் பல ஆயிரம் முனியாண்டி ஹோட்டல்கள் செயல்படுகின்றன.
தை மாதம் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் ரெட்டியார் சமூகத்தினரும் விழா எடுக்கின்றனர் என்றனர்.
