

ஆரத்தி சுற்றுபவர்களுக்கு பணம் கொடுத்தால், அது வாக்குக்கு பணம் கொடுப்பதாக கருதப்பட்டு கொடுப்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழகத்தில் சில இடங்களில் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இந்த நேரத்தில், ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பது வாக்குக்கு லஞ்சம் கொடுப்பது போன்றதாகும். எனவே, ஆரத்திக்கு பணம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களை பொறுத்தவரை, கட்சித் தலைவர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். அது கட்சி கணக்கில் வரும். ஆனால், வேட்பாளர்களுடன் பிரச்சாரம் செய்தால், வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பிரச்சாரக் கூட்டங்களுக்கு பணம், பிரியாணி வழங்கி ஆட்களை அழைத்து வருவதாக புகார்கள் வரும் பட்சத்தில், கூட்டத் துக்கு வந்த நபர்களிடம் தகவல் பெறப்பட்டு, அந்த தொகை வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். உணவுக்கு மாவட்டம் தோறும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி செலவு கணக்கில் சேரும்.
விழிப்புணர்வு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதை வலியுறுத்தி 14-ம் தேதி (இன்று) முதல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சினிமா தியேட்டர்களில் இது தொடர்பான குறும்படமும் திரையிடப்படுகிறது. அதே போல் தொகுதி தோறும், 10 இளைஞர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்களிடம் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதற்கான உறுதிமொழி பெறப்படும்.
அதேபோல், வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வரும் வேட்பாளர்கள் விரும்பினால், அலுவலக வளாகத்தி லேயே ‘வாக்குக்கு பணம் தரமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கலாம். இதற்கான வசதி செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக மீது வழக்கு
ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்த தாக வந்த புகாரை சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.