

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றைகூட கைப்பற்ற முடியாத நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். திமுக, அதிமுக ஆகிய எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரசுக்கே ஒதுக்கப்படும். அதேபோல், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏதாவதொன்று காங்கிரசுக்கு ஒதுக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட காரைக்குடி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன.
தற்போது சிவகங்கை எம்பி பதவி, காரைக்குடி எம்எல்ஏ பதவி காங்கிரஸ் வசம் உள்ளது.
அதேபோல், முந்தைய காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளிலும் கனிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. கடந்த 2006-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி, சிவகங்கை, தேவகோட்டை நகராட்சித் தலைவர் பதவிகள், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி காங்கிரஸ் வசம் இருந்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு மற்றும் தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 12 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் ஒன்றில்கூட தலைவர் பதவியை காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை.
குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 4 நகராட்சித் தலைவர் பதவிகளில் பெரும்பான்மை இல்லாத தேவகோட்டை நகராட்சியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது. அந்த நகராட்சியை அதிமுக வென்றது. மொத்தமுள்ள 11 பேரூராட்சித் தலைவர் பதவிகளில் ஒன்று கூட காங்கிரசுக்கு திமுக ஒதுக்கவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்த காங்கிரஸுக்கு தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் ஓரிடத்தில்கூட தலைவர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.