Published : 14 Apr 2016 05:20 PM
Last Updated : 14 Apr 2016 05:20 PM

துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை: வெளிச்சம் சேனல் தொடக்க விழாவில் விஜயகாந்த் பேச்சு

துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்க விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலான வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்க விழா சென்னை அண்ணா நகரில் இன்று நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட தேமுதிக – ம.ந.கூட்டணி- தமாகா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய விசிக தலைவர் திருமாவளவன், ''தொலைக்காட்சி ஆரம்பிப்பது என்பது சாதாரண காரியமில்லை. பெரிய பெரிய பண முதலைகளே தொலைக்காட்சி ஆரம்பித்து பின்னர் முடியாமல் அந்த முயற்சியை கைவிட்டுள்ளனர். ஆழம் பார்த்து காலை விடுங்கள் என்றெல்லாம் எனக்கு பலர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அம்பேத்கரின் பிறந்த நாளில் இந்த தொலைக்காட்சியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்துள்ளார். எங்கள் அணி இந்த முறை நிச்சயம் வெற்றி பெறும், முதல்வராக விஜயகாந்த் பொறுப்பேற்பார். என்னை தனிமைப்படுத்த பலரும் முயன்ற போது, எனக்கு அண்ணன்களாக நின்று கூட்டணியின் 5 கட்சித் தலைவர்களும் காப்பாற்றுகின்றனர்'' என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறும் போது, ''இருள் படிந்துள்ள தமிழகத்தில் ஒளியேற்ற இந்த வெளிச்சம் பிறந்துள்ளது. இந்த தொலைக்காட்சி வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். எதிரிகளை கூட நம்பலாம். ஆனால், துரோகிகளை ஒரு போதும் நம்ப முடியாது.துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'' என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், ''தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். அது சாதாரண காரியமல்ல, அதனை திருமாவளவன் செய்துள்ளார். வெளிச்சம் தொலைக்காட்சி எங்கள் அணியின் ஆயுதமாகும். தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்த போது, பஞ்ச பாண்டவர்கள் என்றோம். இப்போது, வாசன் எங்கள் அணிக்கு வந்துள்ளார். இந்த குருஷேத்ரத்தில் வாசன் என்னும் கர்ணனும் பஞ்ச பாண்டவர்களுடன் இணைந்துள்ளார். எனவே, நாங்கள் வெல்வோம்'' என்றார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசும் போது, ''அம்பேத்கர் பிறந்த நாளில் ஆரம்பிக்கப்படும் தொலைக்காட்சி வெற்றி பெறும். திமுக, அதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு நாங்கள் அமைக்கவுள்ள கூட்டணி ஆட்சி முற்றுப்புள்ளி வைக்கும்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ண பேசும் போது, ''ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் இன்னொரு முயற்சியாக தொலைக்காட்சியை தொடங்கியுள்ள திருமாவளவனை வாழ்த்துகிறேன்'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ''எங்கள் அணி உடைந்து விடும், உடைந்து விடும் என்றார்கள். இப்போது நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். திமுக,அதிமுகவிடம் ஜனநாயகரீதியாக தொகுதி பங்கீடு பேச முடியாது. முதன் முறையாக 6 கட்சிகளும் அமர்ந்து தொகுதி பங்கீட்டினை முடித்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x