

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 9 இடங்களிலும், திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும் பாஜக, தேமுதிக தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். சுயேச்சைகள் இருவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர்.
இந்த பேரூராட்சிக்கான தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த 12-வது வார்டு கவுன்சிலர் சுபீனாவுக்கு முன்மொழிய யாரும் வரவில்லை என்பதால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
6-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, திமுகவில் இணைந்த கமலா நேரு திமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
செயல் அலுவலர் கோபால் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா 9 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து, குலுக்கல் நடத்தப்பட்டு அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் அறிவித்தார்.
ஆனால், தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் திமுகவினர் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இப்பேரூராட்சி 9-வது வார்டு அதிமுக கவுன்சிலர் உமாவிடம் திமுக பிரமுகர் ஒருவர் பேரம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக பக்கம் வருமாறும், அதற்காக ரூ.50 லட்சம் மற்றும் துணைத் தலைவர் பதவி தருவதாகவும் அந்த பிரமுகர் கூறுகிறார். தங்களுக்கு பணம் முக்கியமில்லை, யாரிடமும் கேவலப்பட முடியாது என்று, கவுன்சிலர் பதில் தெரிவிக்கிறார். இந்த ஆடியோ விவகாரம் அதிமுக, திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.