

இலங்கையிலிருந்து 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் அகதிகளாக சனிக்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் வந்திறங்கினர்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று, 2009, மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேஸ்வரத்திற்கு அகதிகளின் வருகை நின்றபாடில்லை.
இந்நிலையில் முல்லைத் தீவு பகுதியிலிருந்து தனிப்படகில் ஒரே குடும்பத்தை சார்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் அகதிகளாக சனிக்கிழமை அதிகாலை தனுஸ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்தடைந்தனர்.
இதுகுறித்து அகதியாக அந்தோனி குருஸ் (35) நமது செய்தியாளரிடம் கூறியதாவது,
நான், எனது மனைவி செல்வி (32) இரண்டு மகன்கள் ரோசரியோ (7) ரியான் (3) ஆகிய நால்வரும் முல்லைத்தீவில் இருந்து படகில் ரூ.20 ஆயிரம் கொடுத்து வந்தோம். எங்கட நாட்டில் தமிழர்களுக்கு போதிய வருமானம் மற்றும் பாதுகாப்பு இல்லை. என் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு கிட்னி பாதிப்பும் உள்ளது. அவளுக்கு மருத்துவம் செய்யவே தமிழ்நாடு வந்தோம். எங்கள் உறவினர் முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் அகதிகள் முகாமில் உள்ளனர், என்றார்.
அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.