'கொடிகட்டிப் பறக்கும் சாதிவெறி' - பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்

'கொடிகட்டிப் பறக்கும் சாதிவெறி' - பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த திமுக உறுப்பினர்
Updated on
1 min read

ஈரோடு: பவானி நகராட்சி 22-வது வார்டு உறுப்பினர் பதவியேற்ற மூன்றே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சி இரு இடங்கள் மற்றும் சுயேச்சை ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன.

இதில் திமுக சார்பில் 22வது வார்டில் போட்டியிட்ட சரவணன் என்பவர் சமூக வலைதளங்களில், "இந்த ஜென்மத்தில் நான் இனிமேல் உறுப்பினராக போட்டியிட மாட்டேன். பவானியில் சாதிவெறி கொடிகட்டிப் பறக்கிறது. நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி வந்தவுடன் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று தனது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார். வார்டு உறுப்பினராக பதவியேற்ற மூன்றே தினங்களில் வார்டு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தது பவானி நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in