Published : 05 Mar 2022 09:41 PM
Last Updated : 05 Mar 2022 09:41 PM

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் எதிர்கால கல்வி? - மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட136-வது வார்டு சிவலிங்கபுரத்தில் 23-வது மெகா கரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: "தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று (04.03.2022) மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346 (10,00,30,346) கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கரோனா தடுப்பூசி செலுத்துவதை ஒரு பேரியக்கமாக நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் விளைவாக இந்த 10 கோடி என்ற இலக்கினை அடைய முடிந்தது.

தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 91.54% முதல் தவணை தடுப்பூசியும், 72.62% இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் 83.9% முதல் தவணை தடுப்பூசியும், 47.17% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் இதுவரை 6,37,264 நபர்களுக்கு அதாவது 76.57% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேயர் பதவிக்கு என பல்வேறு சிறப்புமிக்க மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்த மரபினை கடந்த ஆட்சிக் காலத்தில் மாண்புமிகு மேயர் என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. தற்சமயம் மேயரை மீண்டும் வணக்கத்திற்குரிய மேயர் என அழைப்பது குறித்து தமிழக முதல்வர் பரிசீலிப்பார்.

உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த 2,200 மாணவர்கள் படித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x