

மதுரை: ‘‘சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரம்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு பேருந்திலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தோ வாருங்கள் ’’ என்று அரசு ஊழியர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது காற்று மாசு பிரச்சினை. தமிழகத்தில் வாகன மாசு, நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசினைக் கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அதற்கான முதல் முயற்சியாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மாசற்ற அலுவலக வாரப் பயண நாளை கடைபிடித்து, அன்று மோட்டார் வானகங்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுத்துள்ளனர். அதனால், வாரந்தோறும் புதன்கிழமை அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பொதுப் போக்குவரத்து மூலமாகவோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ அலுவலகத்திற்கு வருகிறார்கள்.
அதைப் பின்பற்றி தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், பசுமை முயற்சியை முன்னெடுக்கும் வகையில், ’சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் காற்று மாசுப்படுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும் இனி வாரத்தில் புதன்கிழமையன்று மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு துறை ஊழியர்களும் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தள்ளார். இதை உத்தரவாக கருதாமல் அன்பு வேண்டுகோளாக ஏற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் கூறுகையில், ‘‘பெருநகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதனால், படிப்படியாக குறைக்க பொதுமக்கள் முடிந்தளவு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். அரசு ஊழியர்களை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தது, ஒரு சிறு படியென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் தொடக்கமாகும்’’ என்றார்.