Last Updated : 05 Mar, 2022 03:11 PM

 

Published : 05 Mar 2022 03:11 PM
Last Updated : 05 Mar 2022 03:11 PM

’10 பேர் குற்றவாளிகள்’ - கோகுல்ராஜ் கொலை வழக்கில் 7 ஆண்டுகளாக நடந்தது என்ன?

குற்றவாளிகள்கரூர் மாவட்டத்தில் கோகுல் என்ற இளைஞரை கொலை செய்த வழக்கில் மதுரை நீதிமன்றம் பத்து பேருக்கும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள். படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி

சென்னை: பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும், தண்டனை விவரம் வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு கடந்து வந்த பாதை இது...

காதல் பிரச்னை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தலித் இளைஞரான இவர், காதல் பிரச்சினை காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கோகுல்ராஜ்

இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார்,சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் சுட்டுக் கொலை: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஜோதிமணி (40) என்பவர் சொத்துப் பிரச்னை காரணமாக தனது கணவர் சந்திரசேகர் என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பிணைக்கு இடைக்கால தடை: கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை (ஜாமீன்) வழங்கியது. இதனால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே யுவராஜுக்கு பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

18 மாதங்களில் முடிக்க உத்தரவு: இந்நிலையில், யுவராஜ் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவி்ட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் மலைக்கோயில் வளாகத்தில் கோகுல்ராஜ் அவரது தோழியும் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் பார்வையிட்டனர்.

விசாரணை தொடக்கம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி வியாழக்கிழமை விசாரணை தொடங்கியது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் அமுதரசு என்பவரை தவிர 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முதல் நாளில் கோகுல்ராஜ் தாய் சித்ரா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடைகள் அவரிடம் காட்டப்பட்டு, அவரது ஆடை என உறுதி செய்யப்பட்டது. நீதிமன்ற கூண்டில் நின்று முதல் நாளில் சாட்சியம் அளித்த கோகுல்ராஜ் தாய் சித்ரா, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து ஆவேசமாக பேசினார். மேலும் ,அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதுகொண்டே சாட்சியம் அளித்தார்.

நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த கோகுல்ராஜ் தாயார் சித்ரா.

மதுரை நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம்: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கு விசாரணை வெளிப்படையாக நடக்கவில்லை. மிரட்டலுக்கு பயந்து சிலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். எனவே, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

விசாரணை அதிகாரி தற்கொலை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து டிஎஸ்பி தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகியவை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதன் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x