உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் அரசியல் ஆதாயம் தேடும் தமிழக அரசு: பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும்விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காகவே எம்.பி., எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

வானொலியில் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) உரைகளை தொகுத்து, தமிழில் ‘மனதின் குரல்’ என்ற பெயரிலேயே 5 தொகுதி நூலை செந்தில் பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தகக் காட்சியில் நேற்று நடைபெற்றது. நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட, முதல் பிரதியை சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி, சமூக சமத்துவப் படை கட்சித் தலைவர் பா.சிவகாமி பெற்றுக் கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: சீனா, பாகிஸ்தான், அமெரிக்காவால்கூட உக்ரைனில் இருந்து தங்களது நாட்டு மக்கள்,மாணவர்களை மீட்க முடியவில்லை. ஆனால்,போர் நடைபெறும் இரு நாட்டின் அதிபர்களிடமும் பேசும் மாண்பு நமது பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது. 4 மத்திய அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.‘ஆபரேஷன் கங்கா’ மூலம் இன்னும் 2 நாட்களில் மீட்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 13,600 ஆகஅதிகரிக்கும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 40 ஆண்டுகள் பல்வேறு நாடுகளில் வெளியுறவுப் பணி செய்தவர். முதல்வர் போன்று வாட்ஸ்அப் கால் பேசி பில்டப் செய்வது அவரது வேலை இல்லை. தற்போது,மாணவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் மாநில அரசின் கடமை.ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக எம்.பி.,எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இவர்களால் அங்கு சென்று ஒன்றுமே செய்ய முடியாது. இதில் முதல்வர் ஸ்டாலின்ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. மாணவர்களை மீட்பதில் அரசியல் செய்யக் கூடாது. திமுக கூட்டணி முரண்பாடு நிறைந்து காணப்படுகிறது. அனைத்து பதவிகளிலும் அவர்களே அமரும் வெறியில் உள்ளனர்.

மாணவி லாவண்யா மரணம் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் தனதுஅறிக்கையில் தமிழக அரசும்,காவல் துறையும் செய்த தவறுகள் பற்றி கூறியுள்ளது. மாணவிமரணத்துக்கு மதமாற்றம் காரணமாக இருப்பதாக ஆணையதலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைதை துரைசாமி பேசும்போது, ‘‘யாருமே செய்யாததை செய்யும் மோடியின் புகழை பாடுவதில் எனக்கு எந்த தடையும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in