Published : 05 Mar 2022 04:00 AM
Last Updated : 05 Mar 2022 04:00 AM

திமுக கூட்டணி கவுன்சிலரின் ஒரு வாக்கு மாறியதால் அதிமுக வெற்றி

ஈரோடு: ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சி 15 வார்டுகளில், திமுக கூட்டணியில் 5 திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலர்கள் என மொத்தம் 8, அதிமுக சார்பில் 6 கவுன்சிலர்களும், பாமக கவுன்சிலர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.

பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் ரேவதியும், அதிமுகவின் செல்வியும் போட்டியிட்டனர். இதில், 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை ஏற்க மறுத்த திமுக கூட்டணிக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடந்தது. இதில், அதிமுக கவுன்சிலர் செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி ஹேமலதா வெற்றிச் சான்றிதழை அளித்தார். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கவுன்சிலர் வாக்கினை மாற்றிப் போட்டதால், பாமக ஆதரவுடன் அதிமுக தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

***

அமமுக ஆதரவுடன் தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் அதிமுக-10, அமமுக-5, காங்கிரஸ்-6, திமுக-5, சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. சுயேச்சையாக வெற்றிபெற்றவர் திமுகவில் இணைந்தபோதும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தலைவர் பதவியை கைப்பற்ற போதிய பலம் இல்லை. இந்நிலையில் தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.

நேற்று மறைமுகத் தேர்தல் தொடங்கியபோது தேர்தல் அலுவலரான அசோக்குமார், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வர மறுத்துவிட்டார். இதையடுத்து நகராட்சி பொறியாளர் மதுசூதனன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். முன்னதாக திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நடந்த தேர்தலில் அதிமுகவின் சுந்தரலிங்கம் தலைவராகவும், ரமேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

***

உசிலம்பட்டியில் நகராட்சி தலைவரான போட்டி திமுக கவுன்சிலர்

மதுரை: உசிலம்பட்டி நகராட்சித் தலைவருக்கான திமுக வேட்பாளராக 10-வது வார்டு கவுன்சிலர் செல்வி என்பவரை அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. நகராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. செல்வியை எதிர்த்து, அக்கட்சியில் 11-வதுவார்டு கவுன்சிலர் சகுந்தலா நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடந்ததில் செல்விக்கு 6 வாக்குகளும், சகுந்தலாவுக்கு 17 வாக்குகளும் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது. சகுந்தலா வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இவர் சில திமுக, அதிமுக, அமமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் நகராட்சித் தலைவரானார். இதையடுத்து செல்வியின் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கல்வீச்சு சம்பவமும் நடந்தது. மதுரை- தேனி சாலையில் செல்வியின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x