Published : 05 Mar 2022 04:03 AM
Last Updated : 05 Mar 2022 04:03 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் ரகுராமன். இவரது மனைவி ராமலோக ஈஸ்வரி, திருத்துறைப்பூண்டி நகராட்சித் தேர்தலில் 11-வதுவார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, நகர்மன்ற துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பில் ராமலோக ஈஸ்வரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் ராமலோக ஈஸ்வரியின் வீட்டில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. ரகுராமன், ராமலோக ஈஸ்வரி வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் சுற்றுச்சுவரில் தீ எரிந்துகொண்டிருந்தது. தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையே, நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் ராமலோக ஈஸ்வரி போட்டியிடவில்லை. அப்பதவிக்கு திமுக கவுன்சிலர் ஆர்.எஸ்.பாண்டியன்போட்டியின்றி தேர்வுபெற்றார். முன்னதாக திருத்துறைப்பூண்டி நகராட்சித் தலைவராக தேர்வான திமுகவைச் சேர்ந்த கவிதா பாண்டியன், ஆர்.எஸ்.பாண்டியனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
***
காங்கிரஸுக்கு ஒதுக்கிய நிலையில் போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ், அமமுக, சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. நகராட்சித் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக நகர் பொறுப்பாளர் பாலமுருகனின் மனைவி ரேணுப்பிரியா தேனி நகராட்சி 10-வது வார்டில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த மறைமுகத் தேர்தலில் 27 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறிது நேரத்தில் தலைவர் வேட்பாளரான காங்கிரஸ் உறுப்பினர் சற்குணம், தனது ஆதரவு வார்டு உறுப்பினர்களான சுப்புலட்சுமி, ராமமூர்த்தி ஆகியோருடன் வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் திமுக தரப்பில் இருந்து ரேணுப்பிரியா மனுதாக்கல் செய்து போட்டியின்றி வெற்றி பெற்றார். இதைக் கண்டித்து காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர்.
***
புள்ளம்பாடி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளரிடம் வீழ்ந்த திமுக
திருச்சி: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 4, சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். திமுக வேட்பாளர் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3-வது வார்டு உறுப்பினர் கோகிலா முத்துகிருஷ்ணனும் 1-வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஜோஆலிஸ் செல்வராணியும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் சுயேச்சை வேட்பாளர் ஜோஆலிஸ் செல்வராணி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளருக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
தொடர்ந்து, நடந்த பேரூராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் 11-வது வார்டு உறுப்பினரான இந்திராகாந்தி திமுக வேட்பாளராக போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து 7-வது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஜீவானந்தம் போட்டியிட்டு, 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT