

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் பாஜகவுக்கு, திமுக கூட்டணி கட்சியினர் வாக்களித்திருப்பது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயர் பதவியேற்ற முதல்நாளே திமுக உட்கட்சி பூசல் வெடித்தது.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில், திமுக கூட்டணி யில் திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 என, 32 உறுப்பினர்கள் பலம் இருந்தது. திமுக மேயர்வேட்பாளராக மகேஷ் போட்டியிட்டார்.
அதுபோல், பாஜக 11, அதிமுக 7 என மொத்தம் 18 உறுப்பினர்கள் பலத்துடன், பாஜகவின் மேயர் வேட்பாளராக மீனாதேவ் களமிறங்கினார். இதுதவிர 2 சுயேச்சைகளின் ஆதரவைப் பெற இரு தரப்பினரும் கடுமையாக முயற்சித்தனர்.மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ்28 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் மீனாதேவ் 24 வாக்கு பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தாலும், மொத்தம் 20 வாக்குகள்தான் பாஜக பெறமுடியும். மீதமுள்ள 4 வாக்குகள் திமுக தரப்பில் இருந்தே பாஜகவுக்கு கிடைத்துள்ளன. திமுக மற்றும் கூட்டணிக்குள் உட்கட்சி பூசல் வேலை நடந்திருப்பதை அறிந்து திமுக அதிர்ச்சி அடைந்தது.
இதற்கிடையே, நேற்று மதியம்துணை மேயர் தேர்தல் நடந்தது. துணை மேயருக்கு திமுக வேட்பாளராக மேரி பிரின்சி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால்,திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் பாஜக, அதிமுக ஆதரவுடன் போட்டி வேட்பாளராக களமிறங்கினார். இதில், 28 வாக்குகள் பெற்று திமுக வெற்றிபெற்றது. 24 வாக்குகளை ராமகிருஷ்ணன் பெற்றார். இதன்மூலம், திமுக உறுப்பினர்கள் சிலரை பாஜக இழுத்திருப்பது உறுதியானது.
மேயர் பதவியேற்ற முதல்நாளே திமுகவுக்குள் வெடித்துள்ள உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களை, முறையாக ஒருங்கிணைக்காத உள்ளூர் நிர்வாகிகள் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.