

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிமுக 11, திமுக 8, காங். 1, இந்திய கம்யூ.2, சுயேச்சைகள் 5 என வெற்றி பெற்றன. திமுககூட்டணியும், அதிமுகவும் சமமான எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்களை பெற்றிருந்த நிலையில், சுயேச்சை உறுப்பினர்கள் அமைச்சர் கே.என்.நேருவைசந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று கருதப்பட்டது.
இதையடுத்து, மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் கீதா மைக்கேல் ராஜ், அதிமுகவின் பா.சுதா போட்டியிட்டனர். நேற்று நடைபெற்றமறைமுக தேர்தலில் அதிமுகவின் சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். மணப்பாறையில் நகராட்சித் தலைவர் பதவியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது.
திமுகவைத் தோற்கடித்த காங்கிரஸ்
திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 2, காங். 1, சுயேச்சைகள் 4 என வெற்றி பெற்றிருந்தன. பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் குமுதவள்ளி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நடைபெற்ற மறைமுக தேர்தலில் ரா.சிவகாமசுந்தரி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
***
செங்கோட்டை நகராட்சியில் அதிமுக, பாஜக ஆதரவுடன் சுயேச்சை வெற்றி
தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், செங்கோட்டையில் உள்ளூர் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துக் கொண்டனர். இதன்படி, பாஜக போட்டியிட்ட 4 வார்டுகளிலும் அதிமுக போட்டியிடவில்லை.இதில், அதிமுக 10, திமுக 7, பாஜக 3, காங்கிரஸ் 2, சுயேச்சை 2 வார்டுகளில் வெற்றிபெற்றனர். பாஜக ஆதரவுடன் நகராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக, பாஜக ஆதரவுடன் சுயேச்சை உறுப்பினர் ராமலெட்சுமி, திமுகவின் பினாஷா போட்டியிட்டனர். தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிப்பதில் தாமதம் ஆனது. இதனால், திமுகவை கண்டித்து அதிமுக, பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைசியில், அதிமுக, பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் ராமலெட்சுமி 15 வாக்குகள் பெற்று நகராட்சி தலைவரானார்.
***
அதிமுக ஆதரவுடன் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய அமமுக
தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளையும், அமமுக 6 வார்டுகளையும், அதிமுக 2 வார்டுகளையும் கைப்பற்றின. அதிமுகவினரின் ஆதரவைப் பெற்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் அமமுக மற்றும் திமுகவினர் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவின் 15-வது வார்டு உறுப்பினர் மு.பவானியும், அமமுகவின் 11-வது வார்டு உறுப்பினர் மிதுன் சக்கரவர்த்தியும் போட்டியி்ட்டனர். பவானி 7 வாக்குகள் பெற்றார். அமமுக வேட்பாளர் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவினருடன் இணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற்றதாக அமமுகவினர் தெரிவித்தனர்.