Published : 05 Mar 2022 04:20 AM
Last Updated : 05 Mar 2022 04:20 AM

நீலகிரி: கூடலூர் நகராட்சியில் தலைவராக போட்டி வேட்பாளர் தேர்வு

உதகை

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. கூடலூர் நகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் வெண்ணிலா ஒரு வாக்கில் தோல்வியுற்றார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகளிலும் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

உதகை நகராட்சியில் திமுக சார்பில் எம்.வாணீஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்த்துயாரும் போட்டியிடாததால், வாணீஸ்வரி வெற்றி பெற்றதாக நகராட்சி ஆணையர் காந்திராஜ் அறிவித்தார். குன்னூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் எல்.ஷீலா கேத்ரின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கூடலூர் நகராட்சியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வெண்ணிலாவை எதிர்த்து போட்டி வேட்பாளராக எஸ்.பரிமளா வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 21 வாக்குகளில் வெண்ணிலா 10 வாக்குகளும், எஸ்.பரிமளா 11 வாக்குகளும் பெற்றனர். இதனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் எஸ்.பரிமளா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நெல்லியாளம் நகராட்சியில் சி.சிவகாமி போட்டியின்றி வெற்றிபெற்றார். இவர், பனியர் பழங்குடியினரில் முதல் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணைத் தலைவர்கள் தேர்தலில் உதகை நகராட்சியில் ஜே.ரவிகுமார், குன்னூர் நகராட்சியில் எம்.வசிம்ராஜா, நெல்லியாளம் நகராட்சியில் பெ.நாகராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கூடலூர் நகராட்சி துணைத் தவைலர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியின் தரப்பில் எஸ்.சிவராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸை சேர்ந்த உஸ்மான் வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 21 வாக்குகளில் உஸ்மான் 4 வாக்குகள் மட்டுமே பெற்றார். எஸ்.சிவராஜ் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளில் அதிகரட்டி பேரூராட்சி தலைவராக மு.பேபி, துணைத் தலைவராக ரா.செல்வன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பிக்கட்டி பேரூராட்சி தலைவராக காங்கிரஸை சேர்ந்த எம்.சந்திரலேகா, துணைத் தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமரன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

உலிக்கல் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த அ.ராதா , துணைத் தலைவராக பெ.ரமேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜெகதளா பேரூராட்சியில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக பிரமிளா வெங்கடேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த யசோதா, கி.பங்கஜம் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பிரமிளா வெங்கடேஷ் 2 வாக்குகளும், யசோதா 5 வாக்குகளும், கி.பங்கஜம் 8 வாக்குகளும் பெற்றனர். இதனால், தலைவராக கி.பங்கஜம் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக காங்கிரஸை சேர்ந்த ஜெயசங்கர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கேத்தி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஹேமமாலினியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சந்திகா வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், ஹேமமாலினி 13 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சந்திகா 5 வாக்குகள் பெற்றனர். அதிமுகவுக்கு 6 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், ஒருவர் திமுகவுக்கு வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த விக்டர் போட்டியின்றி தேர்வானார்.

கோத்தகிரி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஜெயகுமாரி தலைவராகவும், உமாநாத் போஜன் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகினர். நடுவட்டம் பேரூராட்சியில் திமுகவின் கலியமூர்த்தி தலைவராகவும், துணைத் தலைவராக துளசி ஹரிதாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போட்டி வேட்பாளர்கள் வெற்றி

ஓவேலி பேரூராட்சியில் திமுகவை சேர்ந்த சித்ராதேவி தலைவராக தேர்வானார். துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவின் செல்வரத்தினம் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தேவர்சோலை பேரூராட்சியில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் பா.வள்ளி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாசரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த யூனஸ்பாபு, 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x