

மாவோயிஸ்ட் இயக்கத்தின் கமாண்டண்ட் ஆக இருந்த சாவித்ரியை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு, கடந்த 2016-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சாவித்ரி, டேனிஸ் உட்பட 7 பேர் சென்று, அங்கிருந்த ஆதிவாசி மக்களை மூளைச் சலவை செய்தனர். இதுதொடர்பான வழக்கில், ஏற்கெனவே டேனிஸ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில்,கடந்த நவம்பரில் சாவித்ரியை கேரளாபோலீஸார் கைது செய்தனர். திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்காக, உதகைக்கு நேற்று அழைத்துவரப்பட்டார்.
மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபாமுன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கஅனுமதி கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, விசாரித்த நீதிபதிசஞ்சய் பாபா, அனுமதி அளித்து உத்தரவிட்டார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் கமாண்டண்ட் ஆக இருந்துள்ளார் என்பதும், துப்பாக்கிகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.