

காங்கயம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நகராட்சித் தலைவர் பதவியை திமுக போட்டி வேட்பாளர் கைப்பற்றினார். துணைத் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது.
காங்கயத்தில் 18 வார்டுகள் உள்ள நிலையில், திமுக 10, காங்கிரஸ் 1, அதிமுக 4, சுயேச்சை 3 வார்டுகளை கைப்பற்றின. இந்நிலையில், ஒரு வார்டில் மட்டும் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணி சார்பில் நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் 10-வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற ஹேமலதா, நகராட்சித் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காங்கயம் நகராட்சி அலுவலகத் தில் நேற்று காலை நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் ஹேமலதா வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் சூர்யபிரகாஷ் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இதில், ஹேமலதாவை உறுப்பினர்கள் முன்மொழியாததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. சூர்யபிரகாஷ் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று மாலை நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினர் இப்ராகிம் கலிலுல்லா, 16-வது வார்டு உறுப்பினர் திமுகவை சேர்ந்த கமலவேணி, 8-வது வார்டு உறுப்பினர் திமுகவை சேர்ந்த வளர்மதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 12 பேரின் ஆதரவோடு இப்ராகிம் கலிலுல்லா துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர்களுக்கு காங்கயம் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் சான்றிதழ் வழங்கினார்.
உடுமலை
உடுமலை நகர்மன்றம் 33 வார்டு உறுப்பினர்களை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக 23, அதிமுக 4, மதிமுக 1, காங்கிரஸ் 1, சுயேச்சை 4 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில் உடுமலை நகராட்சித் தலைவர் வேட்பாளராகஜெயக்குமார் என்பவரை கட்சி மேலிடம் அறிவித்தது. நேற்றுகாலை 10 மணிக்கு நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன்முன்னிலையில், மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் அதிமுக உறுப்பினர்கள்உட்பட 33 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதில் ஜெயக்குமாரை எதிர்த்து, போட்டி திமுகவேட்பாளராக மத்தின் போட்டியிட்டார். இதில் 25 வாக்குகள் பெற்று மத்தின் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஒத்திவைப்பு
பின்னர் மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் அலுவலகத்தின் வெளியே இருந்தபோதும், தேர்வு நடைபெறும் அரங்கத்துக்குள்வரவில்லை. 10 பேர் மட்டுமே இருந்ததால், துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் நகர்மன்றத்துக்கு உட்பட்ட 30 வார்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி 15, அதிமுக 3, பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.
இந்நகராட்சிக்கான தலைவராக திமுகவை சேர்ந்த பாப்பு கண்ணன், துணைத் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கி திமுக தலைமை அறிவித்தது. அதன்படி நகராட்சி ஆணையர் ராமர் தலைமையில், நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.