

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யாவும், துணைமேயராக சி.ஆனந்தைய்யாவும் பதவி ஏற்றனர்.
ஓசூர் மாநகராட்சிக்கு மேயர் மற்றும் துணைமேயருக்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை தொடங்கியது. தேர்தலை மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் நடத்தினார். மேயர் தேர்தலில் திமுக சார்பில் எஸ்.ஏ.சத்யா, அதிமுக சார்பில் எஸ்.நாராயணன் ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எஸ்.ஏ.சத்யா- 27 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக எஸ்.நாராயணன் - 18 வாக்குகள் பெற்றார்.
பின்னர், பிற்பகலில் மேயர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மேயர் அங்கி அணிந்து வந்த எஸ்.ஏ.சத்யாவிடம், மாநகராட்சி ஆணையர் செங்கோல் வழங்கினார். மேயர் சத்யாவை ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மேயர் இருக்கையில் அமர வைத்தனர்.
பிற்பகலில் நடைபெற்ற துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.ஆனந்தைய்யா 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெபி (எ) ஜெயபிரகாஷ் -19 வாக்குகள் பெற்றார்.
ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சி. ஆனந்தைய்யா, ஓசூர் மாநகராட்சியின் முதல் துணை மேயராக பதவியேற்றுக்கொண்டார்.