

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை ஊக்கப் படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியரை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, சீரான இடைவெளியில் ஒவ்வொரு குழுவினரையும் மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடி அவர்களின் திறனையும், உத்வேகத்தையும் அதிகரிப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும்.
அதன்படி, முதல்கட்டமாக தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 14 மாணவ, மாணவியருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி 1 மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது ஆட்சியர் பேசியது:
நமது பெற்றோரில் பலரும் பள்ளிக் கல்வி வரை மட்டுமே படித்தவர்களாக உள்ளனர். ஆனால், படிப்பின் மூலம் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றே அவர்கள் அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் நிறைவேற, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் படிப்பில் உண்மையாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவ, மாணவியர் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும்.
அதேநேரம், மதிப்பெண் மட்டுமே மிக முக்கியமல்ல. மாணவ, மாணவியர் பெரிய இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். ஆனாலும், மதிப்பெண் குறைந்து விட்டாலோ, சிறு தோல்வி ஏற்பட்டு விட்டாலோ அதற்காகவெல்லாம் துவண்டு போவது, விபரீத முடிவுகளை தேடுவதெல்லாம் கூடாது. ஒரு சறுக்கல் அல்லது தோல்வி ஏற்பட்டால் அடுத்த முறை வெற்றி பெற்றே தீருவது என்ற நோக்கத்துடன் மிகத் தீவிரமான உழைப்பை கொட்ட வேண்டும். இலக்கை அடைய எத்தனை முறை வேண்டுமானாலும் முயன்று கொண்டே இருக்கலாம்.
ஐஏஎஸ் தேர்வில் முதல் முறை நான் வெற்றிபெற முடியாததால் தான் அடுத்த முறை அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டேன். சென்னை கன்னிமாரா நூலகத்தை அதிகபட்சமாக பயன்படுத்தத் தொடங்கினேன். அதன் பலனாக, முதல் ரேங்க்-ல் வெற்றி பெற்று சொந்த மாநிலத்தில் அதிகாரியாக முடிந்தது.
படிக்கும் காலத்திலும், பணிக்குச் சென்ற பிறகும் நேர்மையை மட்டும் எந்த சூழலிலும் தவறாமல் கடைபிடியுங்கள்.
பாடங்கள் உட்பட எதையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். புரிந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் பாடங்கள் அனைத்தும் பிடித்தமானதாக மாறும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய இரண்டிலும் படிப்பின் தரம் வேறுபட்டதாக இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க அரசு விரும்புகிறது. அந்த நிலை விரைவில் வரும்.இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.இவ்வாறான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஆட்சியர் தலைமையில் தொடர்ந்து நடத்தப்பட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.