Published : 05 Mar 2022 06:08 AM
Last Updated : 05 Mar 2022 06:08 AM
சென்னை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஷேன் வார்னின் திடீர் மறைவால் அதிர்ச்சியுற்றேன். 'மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார்'. ஓர் உண்மையான விளையாட்டு மேதையை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மரணம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் (52) நேற்று மரணமடைந்தார்.
இதுதொடர்பாக ஃபாக்ஸ் கிரிக்கெட் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஷேன் வார்ன் தாய்லாந்தில் உள்ளதனது வீட்டில் அசைவின்றி கிடந்ததாகவும், மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
ஷேன் வார்ன் கிரிக்கெட் உலகில் ஆகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1992 முதல் 2007-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் 194 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 293 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். பேட்டிங்கிலும் வலுசேர்த்த அவர், டெஸ்ட் போட்டியில் 3,154 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,018 ரன்களும் சேர்த்திருந்தார்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்ன் அங்கம் வகித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். இவரது தலைமையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வந்த வார்னின் திடீர் மறைவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT