Published : 05 Mar 2022 03:50 AM
Last Updated : 05 Mar 2022 03:50 AM

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் காங்கிரஸை வீழ்த்தி திமுக வெற்றி: கூட்டணி தர்மத்தை மீறியதாக காங்கிரஸ் கட்சியினர் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் வேட்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக திமுக பெண் வேட்பாளர் எதிர்த்து போட்டியிட்டதில் வெற்றி அடைந்தார். கூட்டணி தர்மத்தை மீறியதாக காங்கிரஸ் கட்சியினர் திமுகவுக்கு எதிராக, பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 1, அதிமுக 3, சுயேச்சைகள் 4, பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் நகரச் செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்தி சதீஷ்குமார் தலைமை அறிவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் மனு தாக்கல் செய்தார். முடிவில் அதிமுக, திமுக, சுயேச்சைகள் ஆதரவுடன் சாந்தி சதீஷ் குமார் 11 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். செல்வமேரி அருள்ராஜ் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வ மேரி அருள்ராஜ் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினருடன் திமுக கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே திமுக - அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் இந்திராணி தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து செல்வமேரி அருள்ராஜ் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரும்புதூர் பேரூராட்சியின் தலைவர் பொறுப்பை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில் திமுகவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் கூட்டணி தர்மத்தை மீறியும், முதல்வரின் அறிவிப்பை எதிர்த்தும் செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு திமுக துரோகம் இழைத்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x