

சென்னை: ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை, தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் இயந்திரங்கள் பழுது,இணைய இணைப்பு சரிவரக் கிடைக்காதது, சர்வர் பிரச்சினை,விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் குழப்பம் உள்ளிட்ட காரணங்களால் பொருட்களைப் பெறுவதில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, விரல் ரேகை பதிவு ஆதார் ஆணையத்துடன் ஒப்பிடப்படும் நிலையில், பதிவு சரியில்லை என்றால் மீண்டும் சரிபார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், காலவிரயம் ஏற்படுவதுடன், பலமுறை அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டு கின்றனர். குறிப்பாக, முதியோர்அதிகளவில் பாதிக்கப்படுகின் றனர். அதேபோல, தகவல் பலகைகளில் பொருட்களின் இருப்பு நிலவரம், வழங்கப்படும் அளவு, விலை குறித்த அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. இதனால், ரேஷன்கார்டுதாரர் பலமுறை கடைக்குச்செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், இலவச அரிசி பயன்படுத்த முடியாத நிலையில், தரமின்றி உள்ளதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டு எழுகிறது.
இதுதவிர, ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கடைகள் முழுநேரமும் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் நெட்ஒர்க் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால், கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் ரேஷன் கார்டின் துரித குறியீட்டை (க்யூஆர் கோடு) ஸ்கேன் செய்தோ அல்லதுஅட்டை எண்ணை இயந்திரத்தில்பதிவு செய்தோ, பதிவேட்டில் ஒப்புதல் பெற்று, பொருட்கள்வழங்குமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது. பொருட்கள் வழங்குவதில் எவ்வித புகாருக்கும் இடம்தரக்கூடாது என்றும் அறிவுறுத்தி யுள்ளோம்.
முன்பு 12 லட்சம் டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த அரிசியின் நிறம் மாறி உள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பும்போது, இந்த அரிசியும் கலந்துவிடுவதால், தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தவிர்க்கும் வகையில், அதுபோன்ற அரிசி வந்தால், அந்தமூட்டையை தனியாக வைத்துவிட்டு, திருப்பி அனுப்ப வேண்டும். அதை விநியோகிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்தி வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்ப, கூட்டுறவுத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர, அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு, விவரம் ஆகியவற்றை தினசரி அறிவிப்புப் பலகையில் இடம்பெறச் செய்யுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘காலியாக உள்ள 3,176 விற்பனையாளர், 627 கட்டுனர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருட்களின் தரம் குறித்து புகார்கள் வந்தால், அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களின் செயலர், மேலாளர்தான் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
புகார் தெரிவிக்க...
ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை உணவுத் துறை அமைச்சர் (044-25671427), செயலர் (044- 25672224) உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் (044- 28592255), மாநில நுகர்வோர் சேவை மையம் (044-28592828) இலவச உதவி மையம் (1967 மற்றும் 1800-425- 5901) ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.