

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் - 2021, கிண்டியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
வளமான சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு மாநிலத்தின் சிறப்பானவளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது.நமது முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடையும் குறிக்கோளில் தமிழக சுகாதாரத் துறையும் பங்கெடுக்கிறது.
முக்கிய முன்னெடுப்பான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களாக பொதுமக்களின் இல்லம் தேடி மருத்துவ சேவைகள்வழங்கப்படுகின்றன. மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பணிகளைச் செய்வதன் மூலம்உலகிலேயே முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.
அதேபோல ‘இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் 48 மணிநேர அவசர உடனடி சிகிச்சை அளிப்பதோடு அதற்கான செலவினங்களை அரசே ஏற்றுக் கொள்கிறது.
தமிழக அரசு, இந்திய மருத்துவமுறைகளைச் சிறப்பாக அமல்படுத்தி, கரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது. முதல்வர் கூறியதுபோல மக்கள் நலன், தொழில் வளம், சமூக நீதி இவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசானது தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும். இவ் வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாடுத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டலத் தலைவர் சி.கே.ரங்கநாதன், தமிழகத் தலைவர் சி.சந்திரகுமார், முன்னாள் தலைவர் எஸ்.சந்திரமோகன், துணைத் தலைவர் சத்தியகம் ஆர்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.