

திருச்சியில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள, முதல்வரின் பிரச்சார பொதுக்கூட்டத்துக்காக அதிமுகவின் ‘வின்னிங் சென்டிமென்ட்’ இடமான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கும் முதல்வர் ஜெயலலிதா, வரும் 23-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 19 தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்ட மறுநாளான நேற்று முதலே முதல்வர் பிரச்சாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, திருச்சியில் பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தை கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், திமுக அரசைக் கண்டித்து இந்த இடத்தில்தான் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
பின்னர், மக்களவைத் தேர்தலுக்காக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டமும் அதே இடத்தில்தான் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, முதல் முறையாக மக்களவையில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
எனவேதான், அதிமுகவின் ‘வின்னிங் சென்டிமென்ட்’ இடமான பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தையே இந்த முறையும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர்.
அதேவேளையில், முதல்வரின் பாதுகாப்பு மற்றும் பயணத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத இடம் என்பதால் போலீஸ் தரப்பிலும் அந்த இடத்தையே பரிந்துரை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அதிமுக தரப்பில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு அளித்தவுடன், பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடையும்.
இதுதொடர்பாக கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “முதல்வர் பிரச்சாரத்துக்கு வரும் தேதியும், பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தில் அவர் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கான இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.